ARTICLE AD BOX
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் அமீர் கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ் `லாபத்தா லேடீஸ்', `தோபி கட்' ஆகிய பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, பல பிரபல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான `லாபத்தா லேடீஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று விருதுகளை குவித்து வருகிறது.

கிரண் ராவ் தனது திருமணம், சினிமா துறை அனுபவங்கள் மற்றும் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்திருக்கிறார். நேர்காணலில் பேசிய கிரண், "அமீர் கானை திருமணம் செய்ய விரும்பும் என் முடிவை கேட்ட எனது பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர். என் பெற்றோரின் பார்வையில் பல வாக்குறுதிகள் நிறைந்து காணப்பட்டது. நான் பல செயல்களை செய்ய விரும்பும் குணமுடையவள் என்பதை நன்கறிந்த என் பெற்றோர், பிரபல நடிகரான அமீர் கானுடைய வாழ்வின் ஆளுமையால் என்னுடைய திறமைகள் மறைக்கப்படும் என்ற அச்சத்தில் கவலை கொண்டனர்." என கூறினார்.
அமீர் கான் மற்றும் கிரண் ராவ் 2021-ல் விவகாரத்தை பதிவு செய்து, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், விவகாரத்து தங்கள் உறவை பாதிக்கவில்லை எனவும், எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார் கிரண். தனது முன்னாள் கணவர் குறித்து பகிர்ந்த கிரண், "நான் நானாக இருப்பதை அமீர் கான் எப்போதும் விரும்புகிறார். அது அவரிடத்தில் உள்ள மிக சிறந்த பண்பாகும். நானும் அமீரும் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்" என தெரிவித்தார். மிக பிரபலமானவரை திருமணம் செய்ததால் தன் அடையாளத்தை தெலைத்ததாகவும், மீண்டும் தனது சொந்த அடையாளத்தை உணரவே அமீர் கானின் நிழலில் இருந்து வெளிவந்ததாகவும் கூறினார். தனது வளர்ச்சிக்கு ஊக்கம் தந்த அமீர் கானை மிகவும் விரும்பினாலும், தன் சொந்த அடையாளத்தில் அங்கீகாரம் பெற விரும்புவதாக பகிர்ந்தார் கிரண்.

கிரண் ராவ், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்தார். தென்னிந்திய திரைப்படங்களில் கருத்துக்கள் மிகுந்த கதைகளை அதிகம் காண்பதாக சொல்லியிருக்கிறார் கிரண். இதுகுறித்து பேசிய அவர், "நான் மலையாள படங்கள் அதிகம் கண்டுள்ளேன். அந்த திரைப்படங்கள் சொல்லும் திடமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எப்போதும் வியப்படைந்துள்ளேன். புதுமையான கருத்துடைய படங்களை தென்னிந்திய சினிமா யோசிக்காமல் தயாரிக்கிறது. பார்வையாளர்கள் விரும்புவதற்கு ஏற்ப சிறந்த கதைகளை உருவாக்கி, தனக்கென தன்னிகரற்ற ஆதரவை தென்னிந்திய சினிமா கொண்டுள்ளது." என கூறினார்.
``அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!" - கிரண் ராவ்