27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

2 hours ago
ARTICLE AD BOX

27 – தவம் - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
        அற்றே தவத்திற் குரு.

கலைஞர் குறல் விளக்கம்  – எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் “தவம்” என்று கூறப்படும்.

262. தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
       அஃதிலார் மேற்கொள் வது.

கலைஞர் குறல் விளக்கம்  – உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள். தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
        மற்றை யவர்கள் தவம்.

கலைஞர் குறல் விளக்கம்  – துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது.

264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
        எண்ணின் தவத்தான் வரும்.

கலைஞர் குறல் விளக்கம்  – மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.

265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
         ஈண்டு முயலப் படும்.

கலைஞர் குறல் விளக்கம்  – உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப் படுவதாகும்.

266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
        அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

கலைஞர் குறல் விளக்கம்  – அடக்கமும். அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.

267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
        சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

268. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
        மன்னுயி ரெல்லாந் தொழும்.

கலைஞர் குறல் விளக்கம்  – “தனது உயிர்” என்கிற பற்றும், “தான்” என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.

269. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
        ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

கலைஞர் குறல் விளக்கம்  – எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

270. இலர்பல ராகிய காரணம் நோற்பார்
        சிலர்பலர் நோலா தவர்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம். மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும். உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.

Read Entire Article