ARTICLE AD BOX
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக ஒரு நாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும், டி20 தொடரில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஒருநாள் தொடரில் விளையாட வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வருண் சக்ரவர்த்தி மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருதரப்பு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். எனவே, அசத்தலான பார்மில் இருப்பதன் காரணமாகவே, அவரை ஒரு நாள் தொடரில் இந்திய அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருப்பதை துணை கேப்டன் சுப்மன் கில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது உறுதிப்படுத்தியுள்ளார்.இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாடுவது மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவிருக்கிறார்.
33 வயதான வருண் சக்கரவர்த்தி இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கூட, அவர் தமிழ்நாடு அணிக்காக 23 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விஜய் ஹசாரே டிராபி போட்டியில் கடைசியாக விளையாடிய வருண், வதோதரா இல் நடந்த முதற்கட்ட காலிறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.