ARTICLE AD BOX
இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி, சமீபகாலமாக 6 நாள் வேலை குறித்த கருத்துகளை முன்வைத்து வருகிறார். அதாவது, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே அவரது வலுவான கோரிக்கையாக உள்ளது.
இவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். என்றாலும் அவ்வப்போது, இந்த கருத்து மீண்டும் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், பதிவிட்டிருக்கும் கருத்து எதிர்வினையாற்றி வருகிறது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அந்நாட்டில் அரசாங்கத் திறன் (DOGE) எனும் ஒரு புதிய நிர்வாகத் துறை தொடங்கப்பட்டது. இதைக் கவனிக்கும் பொருட்டு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியும் நியமிக்கப்பட்டனர். ஆனால், விவேக் ராமசாமி இந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
என்றாலும், எலான் மஸ்க் DOGE நிறுவனத்தை முழுப் பொறுப்புடன் கவனித்து வருகிறார். இந்த நிலையில் DOGE-ஐப் பாராட்டி எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”DOGE ஊழியர்கள் வாரத்திற்கு 120 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதாவது ஒருநாளைக்கு 17 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள். DOGE வாரத்திற்கு 120 மணிநேரம் வேலை செய்கிறது. ஆனால் நமது எதிரிகள் வாரத்திற்கு 40 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அவர்களை முன்னேறிச் செல்வதற்காக வேலை நேரத்தை அதிகப்படுத்தியுள்ளோம். அதாவது, முந்தைய அதிகாரிகள், ஊழியர்கள் செய்த பாரிய வீண் செலவு, வரி செலுத்துவோர் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடிகளை, இந்த நிறுவனத்தை வாங்கிய 2 வாரங்களிலேயே கண்டுபிடித்துள்ளோம். எனவே, பல தசாப்த கால ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்தப் பதிவுக்கு பயனர்கள் பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அதற்குக் காரணம், 90 மணி நேர வேலை குறித்த கருத்துகள் இணையத்தில் எதிர்வினையாற்றியபோது, எலான் மஸ்கே முன்பு பதிலடி கொடுத்திருந்தார். அப்போது அவர், "வேலை செய்வதற்கு எளிதான ஏற்ற இடங்கள் உள்ளன. ஆனால் யாரும் வாரத்தில் 40 மணிநேரத்தில் உலகை மாற்றவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.