ARTICLE AD BOX
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பிப்ரவரி 22ஆம் தேதி பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் குரூப் பி பிரிவின் நான்காவது போட்டி நடைபெற்றது. அதில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் அபாரமாக விளையாடி 351-8 ரன்கள் குவித்தது.
அதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையையும் இங்கிலாந்து படைத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் அடித்து சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பென் ட்வார்சுய்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அசத்தல்:
அடுத்ததாக 352 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 6, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் 27-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு மற்றொரு துவக்க வீரர் மேத்தியூ ஷார்ட் நிதானமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 47 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.
அவருடன் விளையாடிய ஷார்ட் அரை சதத்தை அடித்து 63 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக ஜோஸ் இங்லீஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர். மிடில் ஓவர்களில் இங்கிலாந்துக்கு பெரிய சவாலைக் கொடுத்த இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
இரட்டை உலக சாதனை:
அதில் அலெக்ஸ் கேரி அரை சதத்தை அடித்து 69 (63) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து மிரட்டலாக விளையாடிய ஜோஷ் இங்லீஷ் சிக்ஸருடன் தனது முதல் சதத்தை அடித்து 120* (86) ரன்கள் விளாசி அபாரத்தை காட்டினார். கடைசியில் மேக்ஸ்வெல் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 32* (15) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 47.3 ஓவரில் 356-5 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இந்தியா பாக் போட்டியை ஒட்டி ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ள விளையாட்டு ஆணையம் – மிளிரப்போகும் மெரினா
இதன் வாயிலாக 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஒட்டுமொத்த ஐசிசி ஒருநாள் தொடரில் 350+ இலக்கை வெற்றிகரமாக துரத்திய முதல் அணியாக ஆஸ்திரேலிய உலக சாதனை படைத்துள்ளது. மேலும் ஐசிசி ஒருநாள் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக ஆஸ்திரேலிய உலக சாதனை படைத்துள்ளது. மேலும் 16 வருடங்களாக சாம்பியன்ஸ் ட்ராபியில் தொடர்ந்து சந்தித்து வந்த தோல்விகளையும் நிறுத்தியுள்ள ஆஸ்திரேலியா வெற்றியை பெற்று தங்களை (2023) உலகச் சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.
The post 27/2 டூ 356/5.. 16 வருடம்.. இங்கிலாந்தை நொறுக்கிய ஆஸி.. ஐசிசி வரலாற்றில் காணாத இரட்டை உலக சாதனை appeared first on Cric Tamil.