ARTICLE AD BOX
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் ஆரம்பகட்ட போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார்.
பந்து வீச்சில் மாற்றம்:
அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் அசத்திய வருண் தற்போது இங்கிலாந்து தொடரிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விடப்பட்ட பின் தமது பவுலிங்கை அலசி ஆராய்ந்து முன்னேறியதாக வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“95% கவனம் என் மீது இருக்கிறது. ஏனெனில் கவனத்தை என்னிடமிருந்து விலக்கி பேட்ஸ்மேன்களிடம் காட்டினால் என்னுடைய செயல்முறைகளை நான் இழந்து ஃபுல்டாஸ் அல்லது ஷார்ட் பந்துகளை வீசக்கூடும். எனவே பவர் பிளே அல்லது டெத் ஓவர்கள் உட்பட அனைத்து நேரங்களிலும் என்னுடைய செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை”
உழைப்பால் கம்பேக்:
“ஆனால் அதுவும் என்னுடைய மனதில் பின்புறத்தில் ஓடும். எனது வேகத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் வேலை செய்தேன். 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் என்னுடைய பவுலிங்கை அலசி ஆராய்ந்தேன். அப்போது நான் அதிகமாக சைடு ஸ்பின் வீசுவதை உணர்ந்தேன். அதனாலேயே பேட்ஸ்மேன்களை என்னால் வீழ்த்த முடியவில்லை என்பதை கண்டறிந்தேன்”
இதையும் படிங்க: 5 பந்தில் 18 ரன்ஸ்.. மழையால் அம்பயரை அவமதித்த இங்கிலாந்து கேப்டன்.. ரசிகர்கள் விளாசலுக்கு பின் வருத்தம்
“அத்துடன் அவர்களை பவுன்ஸ் வைத்து தான் வீழ்த்த முடியும் என்பதையும் கண்டறிந்தேன். எனவே அதை செய்வதற்காக ஓவர் ஸ்பின் டெக்னிக்கில் வேலை செய்தேன். அது தற்போது எனக்கு வேலை செய்கிறது. ஒருவேளை பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனால் அது அதிகமாக சுழல்வதற்கும் வாய்ப்புள்ளது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 2021இல் இந்திய அணி கழற்றி விட்ட பின்.. அதை அனலைஸ் பண்ணி மாத்துனேன்.. கம்பேக் பற்றி வருண் பேட்டி appeared first on Cric Tamil.