ARTICLE AD BOX
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ அலுவலர்களுக்கு இன்று ஒரே நாளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணைகளை வழங்கி, மு.க.ஸ்டாலின் பேசியது:
”இங்கே 2500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது. உயிர் காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள்.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று கருணாநிதி உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல நம்முடைய டாக்டர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய டாக்டர்கள் தேவை. கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும்.
இரண்டு நாள்களுக்கு முன், தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று திராவிட மாடல் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், உங்களைப் போன்ற டாக்டர்களின் பங்களிப்புதான் அதில் மிக மிக முக்கியம். டாக்டர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. மருத்துவத் துறையின் மற்ற பணியாளர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் நிறைவேறப் போவதில்லை, வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.
நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் கடந்துதான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.