1989 சட்டப்பேரவை ‘சம்பவம்’... ஆணாதிக்க அரசியல் களத்தை தெறிக்கவிட்ட ஜெயலலிதா!

2 hours ago
ARTICLE AD BOX

Published : 24 Feb 2025 09:12 AM
Last Updated : 24 Feb 2025 09:12 AM

1989 சட்டப்பேரவை ‘சம்பவம்’... ஆணாதிக்க அரசியல் களத்தை தெறிக்கவிட்ட ஜெயலலிதா!

<?php // } ?>

போற்றப்பட்டார், வெறுக்கப்பட்டார், தெய்வமாக்காப்பட்டார்... ஆனால், அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. அவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது 16-வது வயதில் திரை நட்சத்திரமாக அறிமுகமானது முதல் தனது 68-வது வயதில் விடைபெறும் வரை தன்னை நம்பியே வாழ்ந்த ஆற்றல்மிகு அரசியல் ஆளுமை ஜெயலலிதா.

கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்ணசைவில் விதிக்கத் தெரிந்திருந்த உறுதிமிக்க தலைவராக அறியப்படுபவர் ஜெயலலிதா. பத்து வார்த்தைகள் பேசி விளக்க வேண்டியதை, ஜெயலலிதாவின் ஒற்றைப் பார்வை உணர்த்திவிடும். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பான நிர்வாகத் திறன்மிக்கவராக சிறந்து விளங்கியவர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. 1965-ல் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைத்த அவர், 1982-ல் அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக அரசியல் அவதாரமெடுத்தார். இந்த இடைவெளியில், அவர் கிட்டத்தட்ட 28 படங்களில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் உடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இது ஒரு புறமிருக்க, 1984-ல் ஜெயலலிதா அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 1987-ல் எம்ஜிஆர் உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழக்க, திமுக மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்களின் அவதூறு மற்றும் அவமதிப்புகளைச் சந்திக்கிறார். அதுவரை எம்ஜிஆர் வழிநடத்தி வந்த கட்சி, அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என இரண்டாக உடைகிறது. 1989 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக வந்தார்.

‘சேலைக் கிழிப்பு’ சம்பவம்... தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மறக்க முடியாத நாள்தான் மார்ச் 15,1989. கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வர் கருணாநிதி. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா. தனது போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக உரிமை மீறல் பிரச்சினையை ஜெயலலிதா எழுப்ப அங்கே தொடங்கியது அமளி துமளி. ‘கிழக்கப்பட்டது பட்ஜெட் உரை, உடைந்தது கருணாநிதி மூக்கு கண்ணாடி, கிழிந்தது ஜெயலலிதா சேலை’ என்றெல்லாம் மறுநாளில் தலைப்புச் செய்திகள்.

சட்டப்பேரவையில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையிலான மோதல்களுக்குப் பிறகு, அவையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி மிக முக்கியமானது.

“எனது சேலையை துரைமுருகன் பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம். முதல்வர் கருணாநிதி மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். என் தலையை குறிபார்த்து திமுகவினர் தாக்குதல் தொடுத்தனர். சட்டப்பேரவைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். ஒரு பெண்ணையே சட்டப்பேரவையில் இப்படி அவமானப்படுத்தினார்கள் என்றால், நாட்டு மக்களின் நிலை என்ன..? யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு நீக்கப்படவேண்டும்” என்று ஆவேசமாக முழங்கினார் ஜெயலலிதா.

அதன்பின், 2003 மார்ச் 5-ல் அதே சட்டப்பேரவையில் அதிமுக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதத்தின்போது, ‘சேலை கிழிப்பு’ சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் துரைமுருகனுக்கும் வாக்குவாதம் நடந்தது. “அன்று நான் தாக்கவே இல்லை” என்றார் துரைமுருகன். “நீங்கள்தான் தாக்கினீர்கள்” என்றார் ஜெயலலிதா. இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டனர். சரி, அன்று என்னதான் நடந்தது?

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பகிர்ந்த தகவல் இங்கே நினைவுகூரத்தக்கது. ‘அன்றைய சட்டப்பேரவை கூட்ட விவாதத்தின்போது பெருமளவு வார்த்தை தள்ளுமுள்ளுகள், அதனைத் தொடர்ந்து சண்டை சச்சரவுகள், கூச்சல் குழப்பங்களைக் கடந்து ஆளும் கட்சியான திமுகவின் உறுப்பினர்களால் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டார் என்ற செய்தி பரபரப்பைக் கூட்டியது.

தீ போன்று பரவத் தொடங்கிய இந்தச் சம்பவத்தில், ‘ஒரு பெண் என்றும் பாராமல்…’ என்பதே எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டாக இருந்தது. ஆளும் கட்சியான திமுக.வோ, “நாங்கள் அப்படித் தாக்கவில்லை” என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் சபை நடவடிக்கைகளில் இருந்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சாராத பெண் உறுப்பினர்கள் என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சி தோழர் பாப்பா, காங்கிரஸ் கட்சி ஏ.எஸ்.பொன்னம்மாள் இருவரும் சாட்சியமானார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்படவில்லை என பாப்பாவும், தாக்குதலுக்குள்ளானார் என பொன்னம்மாளும் நாளேடுகளில் தெரிவித்திருந்தார்கள்.

இதில் எது உண்மை? இப்போது இருப்பதைப்போல கணக்கில் அடங்காத ஊடகங்கங்கள் அப்போது இல்லை. நாடும் நாளேடுகளும் இரு பிரிவாகவே இந்த விஷயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தன. வாதங்களும் பிரதிவாதங்களுமாகத் தமிழகத்தின் அரசியல் களம் முதன்முதலாகப் பெண்ணை மையப் பொருளாகக் கொண்டு நகரத் தொடங்கியது அப்போதுதான்’ என்று எழுதியிருக்கிறார் பாலபாரதி.

தமிழக முதல்வராக... 90-களில் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒன்றிணைத்த அவர், 1991-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.

ஆனால், 1991-96 வரையிலான காலக்கட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், வளர்ப்பு மகன் திருமணம், ஆட்சி நிர்வாகத்தை சரிவர கவனிக்காதது என ஏராளமான அதிருப்தியின் காரணமாக, 1996-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்த காலக்கட்டத்தில் அவருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற வழக்குகளின் காரணமாக கடந்த 2001 மற்றும் 2014 என இருமுறை அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. ஆனால், அந்த இரண்டு முறையும் சட்டப் போராட்டத்தை நடத்தி மீண்டு வந்த ஜெயலலிதா, தனது முந்தைய தவறுகளை திருத்திக்கொண்டு மக்கள் நலத் திட்டங்கள், இலவசங்களை அறிவித்து மக்கள் செல்வாக்கைப் பெருக்கினார்.

தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது அரசியல் ஆசான் எம்ஜிஆர் பின்பற்றிய திராவிடக் கொள்கையின் வழிநின்று ஆட்சி செய்தவர் ஜெயலலிதா.

1991-96, 2001 மே-செப்., 2002-06, 2011-14 மற்றும் 2015-16 என ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அவர். 2006 முதல் 2011 வரை தமிழகத்தை ஆட்சி செய்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற அனைவரது கணக்குகளையும் பொய்யாக்கி தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இடம்பெற செய்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அதிசயங்களை நிகழ்த்திய பெருமைக்குரியவர்.

‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா, அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தார். அதன் நீட்சியே அம்மா குடிநீர், அம்மா சிமென்ட், அம்மா உணவகம் என காலத்தின் தேவைக்கேற்ப பரிணமித்திருந்தது.

மக்களிடத்தில் அவருக்குப் பெருகியிருந்த செல்வாக்கு, ஒருமுறை திமுக ஆட்சி என்றால், அடுத்தமுறை அதிமுக ஆட்சி என பல தசாப்தங்களாக நீண்டிருந்த தமிழக அரசியல் வழமையை முறியடித்து 2011-க்குப் பிறகு 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக மகுடம் சூட்டியது.

திரைத் துறையில் ஜெயலலிதா அறிமுகமான பிறகு அன்றைய ‘லேடி சூப்பர் ஸ்டார்’ அவர்தான். பெயர், புகழ், வெற்றியென எல்லாம் அடுத்தடுத்து கிடைத்தது. ஆனால், அரசியல் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவர் வந்த நேரத்தில் அதிமுகவிலும் சரி எதிர்க்கட்சியான திமுகவிலும் சரி இருந்தவர்கள் அனைவருமே பழுத்த அரசியல்வாதிகள்.

அவதூறு, அவமானங்கள், துரோகம், சதி, வழக்கு, நீதிமன்றம், விசாரணை, தீர்ப்பு, தண்டனை என ஜெயலலிதா எத்தனையோ முறை வீழ்த்தப்பட்டார். ஆனால், அவரது துணிச்சல்மிக்க போராட்ட குணத்தால் ஒவ்வொரு முறையும் அவர் திரும்பி வந்தார்.

பெண்ணுரிமை பேசும் திராவிட ஆணாதிக்க தமிழக அரசியல் களத்தில், தன்னிகரற்ற முதல்வராக இருந்த ஒற்றைப் பெண் தலைவர் ஜெயலலிதாதான் என்பதே நிதர்சனம்!

| பிப்.24 - இன்று ஜெயலலிதா பிறந்த நாள் |

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article