ARTICLE AD BOX
*வனத்துறை சிகிச்சை அளிக்க கோரிக்கை
குன்னூர் : குன்னூர் அருகே காலில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டுமாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளதால், இங்கு யானை, சிறுத்தை, கரடி காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால், வனப்பகுதிகள் வறண்டு உள்ள காணப்படுகிறது. நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவைகள் நீரின்றி வறண்டு வருகிறது.
இதனால் குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கி படையெடுத்து வருகின்றன. மேலும் குடியிருப்பில் உலா வரும் காட்டுமாடுகள் சில சமயங்களில் குடியிருப்பில் உள்ள கால்வாய் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றன.மேலும் தடுப்பு வேலிகளில் சிக்கிக் கொள்கிறது. குறிப்பாக குன்னூர் பகுதியில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இரவில் இரைதேடி இவை கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிகிறது. இதனிடையே குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் காட்டுமாடு ஒன்று, காலில் காயத்துடன் கடந்த இரண்டு நாட்களாக சுற்றி வருகிறது.
அந்தக் காட்டுமாட்டிற்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக காயமடைந்த காட்டுமாடு, பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள்,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே விரைவில் காட்டுமாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்களும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் அருகே காலில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுமாடு appeared first on Dinakaran.