ARTICLE AD BOX
கிட்டத்தட்ட வாழ்வா? சாவா? போட்டிதான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு.. ஏனெனில், தாம் விளையாடிய முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவியிருந்தன. மீதமுள்ள இரு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால்கூட தொடரிலிருந்தே வெளியேற வேண்டியதுதான். இத்தனை நெருக்கடியான சூழலில் நடந்தது, குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடந்த 8ஆவது லீக் போட்டி.
லாகூர் கடாஃபி மைதானத்தில் நடந்த மோதலில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டாஸ் குறித்து பேசியிருந்த ஆஃப்கன் கேப்டன் ஹஸ்மதுல்லா, “இரண்டாவது இன்னின்ஸில் ஆடுகளம் சுழலுக்கு உதவும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.. ஏனெனில், ரஷித் கான், நூர் அகமது மற்றும் முகமது நபி என மும்முனை சுழல் தாக்குதலோடு இருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. அதேசமயம் மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் சிறப்பாக இல்லை. டாஸ் தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர், “டாஸ் வென்றிருந்தால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும் போட்டி” எனத் தெரிவித்தார்.
ஆம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் ஆஃப்கன் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு ஆர்ச்சர் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். 5 ஆவது ஓவரிலேயே ஆர்ச்சரின் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 5ஆவது ஓவரின் முதல் பந்திலேயே குர்பாஸ் வெளியேற 5ஆவது பந்திலேயே அடல்லும் வெளியேறினார். 9 ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்.. இம்முறை ரஹ்மத். ஆக, பவர்ப்ளேவுக்குள்ளேயே முக்கியமான மூன்று விக்கெட்களை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
மறுமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் நிதானமாக களத்தில் நின்ற இப்ராஹிம் கேப்டன் ஹஸ்மத்துல்லாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் கியர் மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்குச் சென்றது. ரன்கள் சேர்க்கும் வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்த இப்ராஹிம் 20 ஓவர்களில் அணியை 80 ரன்களுக்கு கொண்டு சென்றார். ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷஹிடி 40 ரன்களில் வெளியேறினாலும், ஓமர்சாய் இப்ராஹிமுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 40 ஓவர்களில் ஆஃப்கன் அணி 5 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது.
ஆனால், இறுதி 9 ஓவர்களில் மட்டும் ஆஃப்கானிஸ்தான் அணி 108 ரன்களைக் குவித்தது. கிட்டத்தட்ட இறுதிவரை களத்தில் நின்ற இப்ராஹிம் 146 பந்துகளில் 177 ரன்களைக் குவித்தார். அதில் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடக்கம். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டக்கெட்(165) அந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆஃப்கன் அணிக்காக அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகவும் இது அமைந்தது.
படுதோல்வியில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறிய அணி இங்கிலாந்துக்கு இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது. தொடக்கத்தில் விக்கெட்கள் விழுந்தாலும், ஹஸ்மதுல்லா, ஓமர்சாய், நபி என மூன்று முக்கிய பார்ட்னர்ஷிப்புகள் அணியை சரிவிலிருந்து மீட்டன.
போட்டி முடிந்து பேசிய இப்ராஹிம், “நான் 7 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ளேன். ஆனால், 1 வருடமாக ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடவில்லை. களமிறங்குவதற்குமுன் நான் ரஷீத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் நான் ரஷீத்துடன் பேசிவிட்டு களத்திற்கு வருகிறேனோ அப்போதெல்லாம் நன்றாக விளையாடுகிறேன். நான் சதம் அடித்ததும் ரஷீத்துக்கு நன்றி தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.