ARTICLE AD BOX

கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியை சேர்ந்தவர் விகாஷ். இவர் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக விகாஷ் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் விடுதி சுகாதாரம் மோசமாக இருந்தாலும், கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தாலும், உணவில் பூச்சி கிடந்தாலும் கூகுளில் தனியார் விடுதிக்கு ஒரு ஸ்டார் மதிப்பீடு கொடுத்து விகாஷ் எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இதனால் கோபமடைந்த விடுதி உரிமையாளர் சந்தோஷ் என்பவர் விகாஷிடம் எதிர்மறை கருத்தையும் ஒரு ஸ்டார் மதிப்பீட்டையும் நீக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு விகாஷ் மறுப்பு தெரிவித்தார். இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் இணைந்து விகாஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து விகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.