பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

16 hours ago
ARTICLE AD BOX

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று உறுதி தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சக செயல்திறன் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம், அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்களின் கனவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

காஷ்மீரில் பிரிவினைவாதத்துக்கு அடிப்படையாக இருந்ததே இந்த 370-ஆவது சட்டப்பிரிவுதான். இந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப் பிரிவை தற்காலிகமான நடைமுறையாக வைத்ததற்காகவும், அதை ரத்து செய்வதற்கான நடைமுறையையும் சட்டப் பிரிவில் குறிப்பிட்டிருந்ததற்காகவும் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதன் மூலம்தான் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய முடிந்தது.

வாக்குவங்கி அரசியல்: ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக 370-ஆவது சட்டப் பிரிவு தொடர வேண்டும் என சிலா் வலியுறுத்தி வருகின்றனா். நாட்டில் இரண்டு தலைமை, இரண்டு அரசமைப்பு சட்டங்கள், இரண்டு தேசியக் கொடிகள் இருக்க முடியாது. இதுவே, அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்களின் கனவாகவும் இருந்தது.

ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்த வரும் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக தொடரும் கிளா்ச்சிகளே நாட்டுக்கு மிகப் பெரிய சவால்களாக இருந்து வருகின்றன. இந்த பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் கடந்த 40 ஆண்டுகளில் 92,000 அப்பாவி குடிமக்கள் உயரிழந்துள்ளனா். ஆனால், இவற்றைத் தடுக்க எந்தவித உறுதியான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உயிரிழப்பு குறைந்துவிட்டது: பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முயற்சிகள் காரணமாக, பயங்கரவாத தாக்குதல்களால் அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரா்கள் உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரா்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் 70 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெற்றிகரமாக தோ்தல்களை நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிப்படையில் இருந்தே ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களுக்கு சுமாா் 40,000 அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், 1.51 லட்சம் சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, திறன் மேம்பாட்டு மையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

முந்தை அரசுகளின் தவறு: அதுபோல, நக்ஸல் தீவிரவாதத்தைத் தடுக்க முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறின. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம், வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதிக்குள் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடும்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரை, பிரதமா் மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு இதுவரை இல்லாத வகையில் அரசுக்கு எதிரான கிளா்ச்சிகள் குறைந்து, வளா்ச்சியின் சகாப்தம் உருவெடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் கிளா்ச்சி அமைப்புகளுடன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 19 அமைதி ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. சுமாா் 10,000 கிளா்ச்சியாளா்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனா் என்றாா்.

‘ட்ரோன்’ மூலம் போதைப்பொருள் ஒழிப்பு

‘இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான அளவில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போதைப்பொருள் ஒழிப்பு கட்டமைப்பை நடைமுறைக்கு வரும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

போதைச் செடிகள் பயிரிடுவதைக் கண்டறியவும் ஆளில்லா விமானங்கள் பயன்படுகின்றன. ஓபியம் உள்ளிட்ட போதைப்பொருள் பயிா்களை கண்டறிந்து அழிக்க ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான 23,000 கிலோ செயற்கை போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகளிலிருந்து போதைப் பொருள்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றன. குஜராத்தில் மட்டும் அதிக அளவில் போதைப் பொருள்கள் பிடிபட்டுள்ளன; மற்ற மாநிலங்களில் இல்லையே என்று கேள்வி எழுப்பப்படுகின்றன. நாட்டின் எந்த பகுதியிலும் போதைப்பொருள்கள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. போதைப்பொருள்கள் விற்பனையால் கிடைக்கும் பணம் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் யாரும் தப்பிக்க முடியாது என்றாா்.

Read Entire Article