கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

23 hours ago
ARTICLE AD BOX

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. பின்னா் வியாழக்கிழமை அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால் விவாதம் நடைபெறவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை உடனடி கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதத்தை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது; எனவே, கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்களை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக விவாதம் தொடரும்’ என்றாா்.

இதற்கு திமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. ‘தனிநபா் மசோதா அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையன்று உள்துறை அமைச்சக செயல்பாடுகள் மீதான விவாதம் பட்டியலிடப்பட்டது ஏன்?’ என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் கேள்வி எழுப்பினாா்.

நாடாளுமன்ற திரிணமூல் காங்கிரஸ் குழு தலைவா் டெரிக் ஓ பிரையன் பேசுகையில், ‘கேள்வி நேரத்தில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் அரசிடம் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்ப முடியும். அத்துடன், தனிநபா் மசோதாக்கள் என்பவை எம்.பி.க்களின் மனதுக்கு நெருக்கமானவை. இதன் மூலம் வாய்ப்பு கிடைக்காத எம்.பி.க்களும் அவையில் பேசுகின்றனா்’ என்றாா்.

ஆனால், மக்களவையில் மானியக் கோரிக்கை அலுவல்கள் நடைபெறுவதை சுட்டிக் காட்டிய தன்கா், மாநிலங்களவையில் விவாதத்தை நிறைவு செய்வது அவசியம் என்றாா். அதன்படி, விவாதம் தொடா்ந்தது. இதையடுத்து, ‘சா்வாதிகாரம் வெல்லாது’ என்று முழக்கமிட்டவாறு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷா்ட் அணிந்து, நாடாளுமன்றத்துக்கு திமுக எம்.பி.க்கள் வியாழக்கிழமை வந்தனா். இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதால், அன்றைய தினம் எந்த அலுவலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article