ARTICLE AD BOX
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5.3.2025ம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
இதை தொடர்ந்து தொகுதிகள் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமைய வேண்டும் என்ற முறையில் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து நடத்தியுள்ள கூட்டம் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலங்களின் உரிமைகளை நிலை நாட்டுவதுடன், குடியரசு அமைப்பின் அச்சாக விளங்கும் கூட்டாட்சி நெறிமுறைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதை எதிர்கால வரலாறு உறுதி செய்யும்.
வரும்முன் உரைப்பது அமைச்சு என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, நாடு எதிர் கொள்ளும் பேராபத்தை முன் உணர்ந்து, அதனை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்துகொண்ட கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு appeared first on Dinakaran.