ARTICLE AD BOX
Published : 04 Mar 2025 12:40 PM
Last Updated : 04 Mar 2025 12:40 PM
மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா: கொலை வழக்கில் உதவியாளர் கைது எதிரொலி

மும்பை: மகாராஷ்டிராவில் கிராமத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முயன்றதாகக் கூறி அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாகவும், அவாடா நிறுவனத்திடமிருந்து பணம் பறிக்க முயன்றது மற்றும் நிறுவனத்தின் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய 3 வழக்குகள் தொடர்பாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தியது. மேலும், பிப்ரவரி 27 அன்று பீட் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிஐடி தாக்கல் செய்தது.
இந்த கொலை வழக்கில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட்டின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சரும், பீட் மாவட்டத்தின் பார்லி பகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான தனஞ்சய் முண்டே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டன.
சட்டப்பேரவையில் இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் தனஞ்சய் முண்டேவின் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. எனினும், கொலைக்கு மூளையாக செயல்பட்ட வால்மிக் கரட், தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் என்பதால் இந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் தனஞ்சய் முண்டே இன்று (செவ்வாய்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். முண்டேவின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொண்டதாகவும், நடவடிக்கைக்காக அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேட்டுக் கொண்டதை அடுத்தே, தனஞ்சய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார், தார்மிக அடிப்படையில் முண்டே ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (MCOCA) போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 8,000 கோழிகள் உயிரிழப்பு
- இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: உலக வன உயிரின தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
- பூலன்தேவியை போல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு உ.பி.யின் சம்பலில் அச்சுறுத்தலாக இருந்த குசுமா உயிரிழப்பு
- பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு