தமிழகத்தில் எத்தனையோ அழகிய மலைகள் சூழ்ந்த பகுதிகள், அருவிகள், குளுமையை தரும் இடங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அந்த பகுதி மற்றும் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. இத்தனை இடங்கள் தமிழகத்தில் தான் உள்ளதா என ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவிற்கு பலருக்கும் தெரியாத எத்தனையோ மனதை மயக்கும் இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அப்படி பலருக்கும் தெரியாத டாப் 10 மலை பிரதேசங்கள் பற்றி இங்கு பார்க்கலாம். இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த இடங்களுக்கும் ஒரு விசிட் அடித்து விட்டு வாருங்கள்.
தமிழகத்தின் டாப் 10 மலை பிரதேசங்கள் :
1. பச்சைமலை
திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளை சேர்ந்த ஒரு மலைத் தொடர் தான் பச்சைமலை. சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் இந்த மலையில் இருந்து தான் உற்பத்தியாகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பச்சைமலையில் மங்களம் அருவி, கோரையாறு அருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. இங்கு முந்திரி, பலா விளைச்சல் அமோகமாக இருக்கும். இங்கு சென்றால் மறக்காமல் பலாப்பழத்தை வாங்கி ருசித்து விட்டு வாங்க.
2. வத்தல் மலை
தர்மபுரி மாவட்டத்தில் தான் இந்த வத்தல் மலை அமைந்துள்ளது. 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை உச்சியை அடைய 15 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதையை கடந்து செல்ல வேண்டும். அழகான மலைகள், காபி தோட்டங்கள், கடுகு, ஆரஞ்சு, மிளகு போன்றவை பார்ப்பதற்கே மிகவும் அழகாக, மனதிற்கு இதம் தருவதாக இருக்கும். இங்கு கிடைக்கும் காபி தனிச்சுவை மிக்கதாகும். அவசியம் சுவைக்க வேண்டிய ஒன்று.
3. ஜவ்வாது மலை
கிழக்கு தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை ஆகியவற்றை அடுத்து அமைந்துள்ளது ஜவ்வாது மலை. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவி இருக்கிறது இந்த மலைத்தொடர். 1160 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைத் தொடரில் பீமன் அருவி, காவலூர் வானியல் ஆய்வகம் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மூங்கில் காடுகள், நீரோடைகள், அருவிகள் என மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத, ஏராளமான வ்யூ பாயிண்ட்கள் இங்கு உள்ளன. செய்யாறு, நாகநதி, கமண்டல நதி, மிருகண்டா நதி ஆகிய ஆறுகள் இந்த மலையில் தான் உற்பத்தி ஆகின்றன.
4. பழனிமலை
பழனி மலை என்றதும் பலருக்கும் முருகன் கோவில் மட்டும் தான் தெரியும். ஆனால் பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பழனி மலைப்பாதை பலருக்கும் தெரியாது. பெரும்பாலானர்கள் வத்தலக்குண்டு வழியாக செல்லும் பாதையையே கொடைக்கானல் செல்ல பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதை இருப்பதே பலருக்கும் தெரியாது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இந்த மலைப்பகுதி தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதியாகும். சண்முகா நதி, நங்கஞ்சி ஆறு, கொடவனாறு நதி ஆகியவை இங்கு உள்ளன.
5. பன்றி மலை
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்றி மலையை மினி கொடைக்கானல் என்றே சொல்லலாம். சிறு சிறு நீரோடைகள், நீர்வீழ்ச்சி, இதமான வானிலை அழகிய சோலைகள் என இங்க பயணிப்பதே தனி சுகம் தான். பைக் பயணம் செல்லும் விருப்பம் உள்ளவர்கள் இங்கு ஒரு முறை சென்று விட்டு வரலாம். இங்கு கேம்ப், டெண்ட் அமைப்பதற்கும் வசதி உள்ளதால் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை அனுபவித்து விட்டு வரலாம்.
6. தாமரைக்கரை மலை
ஈரோடு மாவட்டத்தில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் தாமரைகரை மலையும் ஒன்று. இந்த மலைக்கு செல்லும் வழியில் வறட்டு பள்ளம் அணை உள்ளது. இங்கு யானைகள் நீர் குடிக்க வரும் காட்சிகளை காண முடியும். இங்கு சுற்றுலா பயணிகள் வந்து தங்கி, ரசிப்பதற்கு ஏற்ற வகையில் வனத்துறை சார்பில் ரெஸ்ட் ஹவுஸ்களும் உள்ளன. இதற்கு அருகிலேயே பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளும் உள்ளன.
7. திம்பம் மலைப்பகுதி
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை ஒரு திகில் அனுபவத்தை தரும் பகுதியாகும். மிகவும் ஆபத்தான பாதை என சொல்லப்படும் இந்த பாதை 27 அபாய கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. வீரப்பன் காடு என அழைக்கப்படும் சத்தியமங்கலம் வனப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்லும் வழியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் வணங்கி விட்டு செல்லலாம். வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் சொந்த வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும்.
8. அய்யூர் தேன்கனிகோட்டை பூங்கா
ஓசூரில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள அய்யூர் தேன்கனிகோட்டை சுற்றுச்சூழல் பூங்கா, வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இடமாகும். மூங்கில் குடில்கள், சிறுவர் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள், பசுமை பள்ளத்தாக்கு முனை, சுனை பாறை உள்ளிட்ட பல அம்சங்கள் இங்கு உள்ளன. அதிக வெப்பம், அதிக குளிர் இல்லாத தட்பவெப்ப நிலையே இங்கு உள்ளதால் இதமான சூழலை அனுபவித்து ரசிக்க ஏற்ற பகுதியாக உள்ளது.
9. மாஞ்சோலை
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான மலை சுற்றுலாத் தலம் மாஞ்சோலை. தேயிலை தோட்டங்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதிக்கு சொந்த வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினரின் அனுமதியை பெற வேண்டும். மணிமுத்தாறு அணைக்கு அருகில் உள்ளதால் அணையின் அழகை முழுவதுமாக கண்டு ரசிக்க முடியும். இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் மேல்கோதையார் அணை அமைந்துள்ளது. இது குமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணைகளில் ஒன்று. மணிமுத்தாறு அருவி, மணிமுத்தாறு அணை, கல்லிடைக்குறிச்சி ஆகியவை இங்கு அமைந்தள்ளன.
10. சித்தேரி மலை
தர்மபுரி மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சித்தேரி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரம் கொண்ட இந்த மலையை சுற்றி ஏற்காடு, பச்சைமலை, கல்வராயன் மலை, கருமந்துறை, வத்தமலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த மலையில் அமைந்துள்ள கோட்டை மலை கரிய பெருமாள் வெங்கடராம சுவாமி கோவில் இங்க மிகவும் பிரபலமானதாகும். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet