ARTICLE AD BOX
கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டுபவர், குரு சோமசுந்தரம். பலே போதை ஆசாமி. அவரது மனைவி சஞ்சனா நடராஜன், மகன் மற்றும் மகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டவும், குடும்பத்தைச் சுமூகமாக நடத்தவும் முடியாமல் தவிக்கிறார். இதனால் தாலியை அறுத்துக் கொடுத்துவிட்டு, மகன் மற்றும் மகளுடன் காணாமல் போகும் சஞ்சனா நடராஜன், மீண்டும் கணவருடன் இணைந்தாரா? குரு சோமசுந்தரம் திருந்தினாரா என்பது மீதி கதை.
குடியைக் கெடுக்கும் குடியின் கோரமுகத்தை இயக்குனர் தினகரன் சிவலிங்கம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். முழுநேர குடிகாரன் கேரக்டரில் குரு சோமசுந்தரம் 100 சதவீத உழைப்பைக் கொடுத்து, நிஜ குடிகார்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார். அவரது மனைவியாக சஞ்சனா நடராஜன், தனது கையறு நிலையை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படிக்கூட தன்னால் நடிக்க முடியும் என்று ஜான் விஜய் வியக்க வைத்துள்ளார். குடிகாரனின் இலக்கணமாக ‘ஜமா’ பாரி இளவழகன் வாழ்ந்துள்ளார். மறுவாழ்வு மையத்தில் மாறன் பேசும் பன்ச் டயலாக்குகள், படத்துக்கு மிகப்பெரிய பலம். ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ ஆண்டனி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் இயல்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை ஈர்த்துள்ளது. கதைக்களத்தைப் புரிந்துகொண்டு ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி மிக நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள் சற்று சலிப்பு ஏற்படுத்துகின்றன. குரு சோமசுந்தரம் தப்பிக்கும் காட்சியில் லாஜிக் இல்லை. குடிகாரர்கள் திருந்த வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட படம் என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.