ARTICLE AD BOX
துபாய் : சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. டாப் எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக இந்த தொடரில் பல பரிட்சை நடத்தும். உலகக் கோப்பை தொடரில் பல பலம் குன்றிய அணிகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.
ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எல்லாமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் விறுவிறுப்புக்கும், சவால்களுக்கும் பஞ்சம் இருக்காது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் தமக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது சாம்பியன்ஸ் கோப்பை தான் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 2009, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடி இருக்கிறார். இதில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரு வீரராக வென்ற விராட் கோலி, 2017 தொடரில் பாகிஸ்தானிடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார். இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்றால் நான்கு ஐசிசி கோப்பையில் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மாவுடன் சேர்ந்து விராட் கோலி பெறுவார்.
இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகிறது. ஒரு தொடராக இது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நாம் ஒரே மாதிரி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் டாப் எட்டு இடத்தை பிடிக்க முடியும். அதன் மூலம் இந்த தொடருக்கு நாம் தகுதி பெற முடியும்.
இந்த தொடரில் எப்போதுமே கடும் சவால்களும் போட்டியும் நிறைந்திருக்கும். ஒரு டி20 உலக கோப்பையில் எவ்வளவு நெருக்கடி ஏற்படுமோ அதை போல் ஒரு நாள் போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இருக்கும். நாம் மூன்று லீக் போட்டிகளில் விளையாடுவோம். இதில் முதல் போட்டியில் தோல்வியை தழுவினால் கடும் அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள்.எனவே முதல் போட்டியிலிருந்து அழுத்தம் நிறைந்து இருப்பதால், இந்த தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நீங்கள் முதல் போட்டிகளில் இருந்து உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.