ARTICLE AD BOX
கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்களுக்கு இடையிலான முதல் போட்டியில் மோதின. இதில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் முடிவில் குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தையும், பாகிஸ்தான் அணி கடைசி இடமான நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் பெரும் சரிவை சந்தித்து உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றுள்ள எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை விளையாடவில்லை.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 320 ரன்களும், பாகிஸ்தான் அணி 260 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து -1.2 என்ற நெட் ரன் ரேட்டைப் பெற்று நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.
நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடனும், +1.200 என்ற நெட் ரன் ரேட்டுடனும் முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் பாகிஸ்தான் அணிக்கு மேலே உள்ளன.
அடுத்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத இருக்கும் போட்டியில் வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றை வைத்தும், நெட் ரேட்டை வைத்தும் இந்தப் புள்ளி பட்டியலில் மாற்றம் இருக்கும். குரூப் பி பிரிவிலும் இதுவரை எந்த அணியும் போட்டிகளில் விளையாடவில்லை. பிப்ரவரி 21 அன்று குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் முதன்முதலாக மோத உள்ளன. அடுத்து 22ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.