ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 04:44 AM
Last Updated : 25 Feb 2025 04:44 AM
உலகில் அதிவேகமாக வளரும் இந்தியா: ம.பி. முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி புகழாரம்

போபால்: உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மீதான உலகத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், இந்தியாவில் நம்பிக்கையுடன் முதலீடு செய்து வருகின்றனர். சூரிய மின் சக்தி உற்பத்தியில் சூப்பர் பவராக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று ஐ.நா. அமைப்பே புகழாரம் சூட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் சூரிய மின் சக்தி துறையில் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி ஆலை வெற்றிகரமாக செயல்படுகிறது.
உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று உலக வங்கி கூறியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் பிரிட்டனுக்கு பின்னுக்கு தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்தது. விரைவில் 3-வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை எட்டுவோம்.
இந்தியாவின் ஜவுளி துறை அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. பருத்தியின் தலைநகராக மத்திய பிரதேசம் மாறியிருக்கிறது. இங்கிருந்து பருத்தி, பட்டு ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையின் பெரும் பகுதி மத்திய பிரதேசம் வழியாக செல்கிறது. இதன்காரணமாக மத்திய பிரதேசத்தின் சரக்கு போக்குவரத்து கணிசமாக அதிகரித்திருக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிஹாரில் ரூ.24,000 கோடி திட்டங்கள்: பிஹாரின் பாகல்பூரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற மத்திய அரசு அயராது பாடுபடும் என்று செங்கோட்டையில் அறிவித்தேன். இதன்படி 4 பிரிவினரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மக்களுக்கு விருப்பமான முதல்வராக அவர் உள்ளார். அவரது அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
ஒரு காலத்தில் ஒரு மூட்டை உரம் ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது ஒரு மூட்டை உரம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உரங்களுக்காக மட்டும் ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் யூரியாவுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யப்பட்டது. தற்போது நாடு முழுவதும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி யூரியா கிடைக்கிறது. பிஹாரில் வேளாண் உற்பத்தி, மீன் உற்பத்தி தன்னிறைவை எட்டி உள்ளது.
பீஹாரில் ஒரு காலத்தில் காட்டாட்சி நடைபெற்றது. அப்போது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அஞ்சினர். இப்போது மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீராகி உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். அன்று காட்டாட்சி நடத்திய தலைவர்கள் இப்போது மகா கும்ம மேளாவை விமர்சித்து வருகின்றனர். பிஹார் கால்நடை தீவன ஊழலை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தற்போது முதல்வர் நிதிஷ் தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, “முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த கட்சிகளின் அவர்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. அந்த கட்சிகள் இந்து, முஸ்லிம்கள் இடையே மோதல்களை ஏற்படுத்தின. தற்போது பிஹாரில் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் விரும்பும் தலைவராக உள்ளார். அவரது சீரிய தலைமையால் பிஹார் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் அதிவேகமாக முன்னேறி வருகிறது" என்று தெரிவித்தார்.
தாமதத்துக்கு வருந்துகிறேன்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தாமதமாக வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுகின்றன. போபாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து நான் புறப்படும் நேரம் பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுத செல்லும் நேரமாக இருந்தது. என்னால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் ஆளுநர் மாளிகையில் இருந்து தாமதமாக புறப்பட்டு, மாநாட்டுக்கு தாமதமாக வந்தேன். அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மகா கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்: பிரயாக்ராஜ் நகர மக்கள் வேண்டுகோள்
- சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள்
- இடதுசாரி கொள்கையை நிராகரித்துவிட்டனர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து
- பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எஃப்சி