ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷமி. நீண்ட இடைவெளிக்குப் பின், சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் கலக்கி இருந்தார். என்றாலும், அவரைச் சுற்றி அப்போதும் விமர்சனம் கிளம்பியது. புனித ரமலான் மாதத்தில் அவர் நோன்பு இல்லாமல் தண்ணீர் பருகியது பேசுபொருளானது. ஆனாலும், அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பிரச்னை அடங்கிப் போனது. இந்த நிலையில், முகமது ஷமியின் மகள் ஹோலி பண்டிகை கொண்டாடியது விஸ்வரூபமெடுத்துள்ளது.
முகமது ஷமி தன் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தனியாய் வசித்து வருகிறார். என்றாலும் அவ்வப்போது மகளுடன் பொழுதுகளைக் கழித்து வருகிறார். ஷாப்பிங்கிற்கும் அழைத்துச் சென்று வருகிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடு முழுதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதை வட இந்திய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்தப் பண்டிகையை முகம்மது ஷமியின் மகளான சிறுமி ஆயிராவும் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது முகமது ஷமியின் மகள் ஹோலி கொண்டாடியதை இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன.
அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, "முகமது ஷமியின் மகள் சிறு குழந்தை. அவர் ஏதும் அறியாமல் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தால், அதில் ஒரு குற்றமும் கிடையாது. ஒருவேளை அவர் ஷரியத் சட்டங்கள் அறிந்தபோதும், ஹோலி பண்டிகையை கொண்டாடி இருந்தால், நிச்சயம் அது குற்றம்தான். இதுதொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
ஷரியத்தில் இல்லாத விஷயங்களை உங்கள் குழந்தைகள் செய்வதை அனுமதிக்காதீர்கள். இந்து மக்களுக்கு ஹோலி மிகப்பெரிய பண்டிகை. ஆனால் இஸ்லாமியர்கள் ஹோலி கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஷரியத் சட்டங்கள் குறித்து அறிந்தபோதும் ஹோலி கொண்டாடினால், நிச்சயம் அது குற்றமே” எனத் தெரிவித்துள்ளார். இவர்தான் ஷமி நோன்பு இல்லாமல் விளையாடுகிறார் எனக் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.