ARTICLE AD BOX
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார்.
எனவே அமெரிக்காவின் நீண்ட முயற்சிக்குப்பின் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஷியாவையும் இந்த போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்க வைக்க டிரம்ப் முயன்று வருகிறார். இதற்காக உயர்மட்டக்குழு ஒன்றையும் அவர் ரஷியாவுக்கு அனுப்பி வைத்தார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கையாக ரஷிய அதிபர் புதினுடன், டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதை நேற்று முன்தினம் மாலையில் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை ரஷியாவும் உறுதி செய்துள்ளது. கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த தகவலை நேற்று உறுதி செய்தார். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ள அம்சம் குறித்து எதையும் வெளியிட மறுத்து விட்டார். டிரம்ப் மற்றும் புதின் இருவரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.