ARTICLE AD BOX
பிரபலங்களின் குடும்ப உறுப்பினர்களும் புகழ் பெறுவதைப்போல, அவர்கள் வாழ்ந்த வீடுகளும் பெருமையாகப் பேசப்படுவதுண்டு. அந்த வீடுகளும் சினிமாவில் இடம் பெறுவதுண்டு. வீடுகளே வறுமையையும், செழுமையையும் காட்டி நடிப்பதுண்டு. அந்த விதத்தில் பல திரைப்படங்களில் தோன்றி செழிப்பைக் காட்டிய சிறப்பு, அந்த வீட்டின் சொந்தக்காரரைப்போல் அவ்வீட்டிற்கும் உண்டு!
அந்தச் சிறப்புக்குரிய வீடு ‘அன்னை இல்லம்’ என்றழைக்கப்படுகிறது. அதன் ஏகபோக உரிமையாளர் ‘நடிகர் திலகம்' செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள்.
அன்னை இல்லத்தின் வரலாற்றை நோக்குவோமா?
சென்னை தியாகராய நகரிலுள்ள ஓரிடத்தில் அந்தக் கால ஐசிஎஸ் அதிகாரியான ஜார்ஜ் டி.போக் (George T.Boag) என்பவர், பரந்து விரிந்த வீட்டைக்கட்டி வசித்தாராம். அவர் அங்கு வசித்த காரணத்தாலேயே அவர் நினைவாக அந்தச் சாலை தெற்கு போக் சாலை (south boag road) என்றழைக்கப்பட்டது. அதன் பின் அந்த வீட்டை சர் குர்ம வெங்கடரெட்டி நாயுடு என்பவர் வாங்கினாராம். அப்போது அவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆக்டிங் கவர்னராக இருந்தாராம். அவரிடமிருந்து அந்தப் பரந்து விரிந்த வீட்டை 1959 ல் நடிகர் திலகம் தன் தந்தையின் பெயரில் வாங்கி, அதன் பின்னர் அதற்கு 'அன்னை இல்லம்' என்ற பெயரைச் சூட்டினாராம்.
சௌத் போக் ரோடு என்பது தற்போது செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்றழைக்கப்படுகிறது.
வீட்டின் பிரமாண்டம் மற்றும் வனப்பு காரணமாக பல படங்களின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டனவாம். சிவாஜி படங்களும், பிரபல கதாநாயகர்கள் பலரின் படங்களும் இந்த வீட்டில் படமாக்கப்பட்டதாகவும், நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தின் சில காட்சிகள் கூட இங்கு ஷூட் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
‘பராசக்தி’ தொடங்கி ‘படையப்பா’ வரை சுமார் 250 படங்களுக்கும் மேலாக நடித்த செவாலியே சிவாஜி, இந்த வீட்டை வாங்கியபோது, சுதந்திரப் போராட்ட வீரரான அவர் தந்தை சிறையில் இருந்தாராம். தாய் பல சிரமங்களுக்கு இடையே குழந்தைகளை வளர்த்த நிலையில், அவருக்கு மதிப்பளிக்கும் விதமாக அன்னை இல்லம் என்ற பெயரைச் சூட்டினாராம். மேலும் அண்ணன் தம்பிகள் குடும்பங்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டுமென்பதற்காகவே இந்தப் பெரிய வீட்டைத் தேர்வு செய்தாராம். தான் நிறையப் படிக்காத குறையை மனத்தில் நிறுத்தி, வீட்டின் முகப்பில் கையில் புத்தகத்துடன் உள்ள குழந்தை பொம்மையை வைக்கச் செய்தாராம்.
வீட்டிற்கு அருகிலேயே ஒரு கெஸ்ட் ஹவுசையும், ஒரு ப்ரிவியூ தியேட்டரையும் கட்டியதுடன், ஒரு பிள்ளையார் கோயிலையும் நிர்மாணித்தாராம். திரைத்துறை சம்பந்தப்பட்ட பலர் வந்து அந்த விருந்தினர் மாளிகையில் தங்குவராம். பிரபல இந்திப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாததால் அங்கேயே தங்கி அவர் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வாராம்.
பல முதலமைச்சர்கள் - காமராஜர் தொடங்கி எம்.ஜி.ஆர்; ஜெயலலிதா என்று அத்தனை பேரும் விசிட் செய்த வீடாம் அது! திரு வி.பி.சிங் அவர்களும் அங்கு வந்துள்ளாராம். வருகின்ற அனைத்து விருந்தினருக்குமே அற்புதமான அசைவ உணவை வீட்டில் தயாரித்து உபசரிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தாராம், சிவாஜியின் மனைவி கமலா அவர்கள். விருந்தோம்பலுக்குப் பெயர்போன தஞ்சை மண்ணின் சூரக்கோட்டையின் இளவரசரல்லவா அவர்!
பிறந்த நாட்கள் வருகின்றபோது, வாசலிலேயே ஸ்டேஜைப் போட்டு அமர்ந்து விடுவாராம் சிவாஜி. ரசிகர்கள் கூட்டமோ பாண்டி பஜார் வரை நீண்டு கிடக்குமாம். கடைசித் தொண்டன் வருவதற்கு இரவானாலும் அங்கிருந்து அகலாமல் இருந்து, அந்தத் தொண்டனின் அன்பையும் பெற்ற பின்னரே அந்த இடத்திலிருந்து எழுவாராம்.
ஷூட்டிங், வெளியூர் என்று எங்கு சென்றாலும், பிள்ளையாரை வணங்கியே பயணப்படுவாராம்.
இவ்வளவு பெருமைகளையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ள அன்னை இல்லம்
ஏலத்திற்கு வருவதென்பது இதயத்தை நோகடிப்பதே!
சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமாகிய துஷ்யந்தின் திரைப்பட நிறுவனம் வாங்கிய கடனை உரிய காலத்தில் அடைக்காததால், சென்னை உயர்நீதி மன்றம் வீட்டை ஜப்தி செய்ய ஆணை வழங்கியுள்ளதாகவும், இருப்பினும் போதுமான காலக்கெடு கொடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வீடு திரு பிரபுவின் பெயரில் உள்ளதாக திரு ராம்குமாரே தெரிவித்துள்தாகவும் செய்திகள் பரபரக்கின்றன.
இது குறித்து மதுரை ஆதீனம் ஒரு பேட்டியில் கூறியுள்ளது நினைவுகூரத் தக்கது. ’பல வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களை நம் கண்முன்னே கொண்டு வந்த திரு சிவாஜி அவர்களின் வீடு, ஜப்தி செய்யப்படப் போவதாக வந்த செய்திகள் மனதுக்கு வருத்தமளிப்பதாகவும், தன்னிடம் பெருந்தொகை இருந்தால் தானே அதனைச் செலுத்தி வீட்டை மீட்டுக் கொடுத்து விடுவேன்' என்றும் கூறியுள்ள அவர், மேலும் கூறியுள்ளதாவது: 'எம்.ஜி.ஆர்.,காலத்தில் என்.எஸ்.கே வீடு ஜப்திக்கு வந்தபோது, அரசே அதனை மீட்டுக்கொடுத்ததுபோல, இப்பொழுதும் அரசே மீட்டுக் கொடுக்க முன்வர வேண்டுமென்றும்.' கோரிக்கை வைத்துள்ளார்.
பலவற்றுக்கும் காலமே நல்ல பதில் சொல்லும்!
பொறுத்திருந்து பார்ப்போம்!