ARTICLE AD BOX
ஹோம் லோன் வாங்க போறீங்களா? பிக்சட் வட்டி Vs ஃப்லோட்டிங் வட்டி? இரண்டில் எது சிறந்தது?
பலருக்கும் சொந்த வீடு என்பது கனவு. இந்த கனவை நினைவாக்கும் விதமாக சிலர் ஹோம் லோன் பெறுகின்றனர். அப்படி ஹோம் லோன் பெறும்போது அதற்கு 2 விதமாக வட்டி விதிக்கப்படுகிறது. ஒன்று பிக்சட் வட்டி விகிதங்கள். மற்றொன்று ஃப்லோட்டிங் வட்டி விகிதங்கள். இரண்டிற்குமே நன்மை மற்றும் தீமைகள் உள்ளன. எனவே லோன் பெறுவதற்கு முன்பு இந்த 2 வட்டிகளில் உங்களுக்கு எது ஏற்றது? என்பதை தீர்மானித்து அதன் பிறகு லோன் பெற வேண்டும்.
பிக்சட் வட்டி விகிதங்கள்: பெயரிலேயே குறிப்பிட்டிருப்பது போல கடன் காலம் முழுவதும் இந்த வட்டி விகிதம் மாறாது. இதனால் கடன் வாங்குபவர்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை இஎம்ஐ-யாக செலுத்தி வர வேண்டும். நீங்கள் எவ்வளவு தொகை செலுத்தப் போகிறீர்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருப்பதால், நீண்ட காலத்திற்கு உங்கள் பட்ஜெட்டை பொறுத்து திட்டமிடுகையில் பிக்சட் வட்டி விகிதங்கள் ஏற்றது.

ஆனால் பிக்சட் வட்டி விகிதங்கள் 1 முதல் 2.5 சதவீதம் வரை ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கும். ஒரு வேளை வட்டி விகிதம் குறைந்தாலும் நீங்கள் நிலையான விகிதத்தையே நீண்ட காலத்திற்கு செலுத்த வேண்டி வரலாம்.
ஃப்லோட்டிங் வட்டி விகிதங்கள்: ஃப்லோட்டிங் வட்டி என்பது சந்தை விகிதத்தை சார்ந்து இருக்கும் வட்டியாகும். காலப்போக்கில் இந்த வட்டி விகிதம் மாறுபடலாம். நிலையான வட்டி விகிதங்களை விட ஃப்லோட்டிங் வட்டி குறைவாக இருக்கும். சந்தையில் ஏற்படும் மாறுபாடு உங்கள் இஎம்ஐ-களை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கவும் செய்யலாம்.
எந்த வட்டியை தேர்ந்தெடுப்பது?: உங்களுடைய பட்ஜெட் மற்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் தான் வட்டியை தேர்வு செய்ய வேண்டும். நிலையான EMI செலுத்த விரும்பினால் பிக்சட் வட்டி விகிதம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
எதிர்காலத்தில் சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாமல் இருந்தாலோ அல்லது நீண்ட காலத்திற்கு வட்டி செலவில் இருந்து உங்கள் பணத்தை சேமிக்க விரும்பினாலோ ப்லோட்டிங் வட்டி விகிதத்தை தேர்வு செய்யலாம். சில வங்கிகள் பிக்சட் மற்றும் ப்லோடிங் வட்டி விகிதங்களை கொண்டு ஹைபிரிட் லோன்களையும் வழங்குகின்றன. இந்த வகை லோன்களை நீங்கள் தேர்வு செய்தால், ஒரு பகுதியை திருப்பி செலுத்த பிக்சட் வட்டி விகிதத்தையும் மீதமுள்ள பகுதிக்கு ப்லோட்டிங் வட்டி விகிதத்தையும் தேர்வு செய்யலாம்.