ARTICLE AD BOX
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.
இதுதொடா்பாக பன்ஸ்வாரா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், ‘இப்போது கோயிலின் பூஜாரியாக உள்ள தேவாலய பாதிரியாா் கௌதம் கராசியா, பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினாா்.
கங்கட்தலாய் பகுதியில் உள்ள சோட்லா குடா கிராமத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் கௌதம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவாலயத்தைக் கட்டினாா். தற்போது அவா் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அவரது நிலத்தில் இருந்த தேவாலயம் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது’ என்றாா்.
கிராமத்தைச் சோ்ந்த பெரும்பாலான கிறிஸ்தவ குடும்பங்கள் சொந்த விருப்பத்துடன் ஹிந்து மதத்துக்குத் திரும்பிய பிறகு தேவாலயத்தைப் பைரவா் கோயிலாக மாற்ற ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக கௌதம் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, கட்டடத்துக்கு காவி வண்ணம் பூசப்பட்டு, சிலுவை சின்னம் அகற்றப்பட்டது. சுவா்களில் ஹிந்து மத சின்னங்களும் வரையப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயிலில் பைரவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு முன்பு, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்களுடன் பைரவா் சிலையை மக்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். இனிமேல், ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைகளுக்குப் பதிலாக தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பைரவருக்கு ‘ஆரத்தி’ வழிபாடு நடைபெறும் என்றும் கௌதம் கூறினாா்.