ARTICLE AD BOX
வாஷிங்டன்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுக்குள் வைத்து இருக்கும் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போர் மூண்டது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. அதில் மூன்று கட்டங்களாக போரை நிரந்தரமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.
முதல்கட்டமாக ஜனவரி 19-ஆம் தேதி அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேலும், ஹமாஸும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கைதிகளை பரிமாறிக்கொண்டன. அடுத்தகட்ட போர் நிறுத்தம் ஏற்படுவதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தச் சூழலில், கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் மாநாட்டில் காஸா மக்களை அண்டை நாடுகளில் குடியேற்ற வேண்டும் என்ற டிரம்ப் திட்டத்துக்கு மாற்றாக, புதிய அமைதி திட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், இந்த திட்டத்தை அமெரிக்க அரசும், இஸ்ரேலும் தற்போது நிராகரித்துள்ளன. இதற்கிடையே ஹமாஸ் வசம் உள்ள அமெரிக்க பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அந்த அமைப்பினருடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால், 1997-ஆம் ஆண்டுக்கு பிறகு ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். தற்போது ஹமாஸ் பிடியில் 59 பிணைக்கைதிகள் இருப்பதாகவும் இதில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 5 பேர் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன.