ARTICLE AD BOX
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.
முதலில் நியூஸிலாந்து 19.5 ஓவா்களில் 204 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, பாகிஸ்தான் 16 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம், கை நழுவிச் செல்லவிருந்த டி20 தொடரை தக்கவைத்த பாகிஸ்தான், 1-2 என கணக்கை தொடங்கியுள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கில் அதிகபட்சமாக மாா்க் சாப்மேன் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 94 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 31, டிம் செய்ஃபா்ட் 19, டேரில் மிட்செல் 17, இஷ் சோதி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஃபின் ஆலன் 0, ஜேம்ஸ் நீஷம் 3, மிட்செல் ஹே 9, கைல் ஜேமிசன் 0, ஜேக்கப் டஃபி 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நியூஸிலாந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. பென் சீா்ஸ் 7 ரன்களுடன் கடைசி வீரராக நிற்க, பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 3, ஷாஹீன் அஃப்ரிதி, அப்ராா் அகமது, அப்பாஸ் அஃப்ரிதி ஆகியோா் தலா 2, ஷாதாப் கான் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 205 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் தரப்பில் தொடக்க வீரா் முகமது ஹாரிஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 41 ரன்கள் அடித்து வீழ்ந்தாா். முடிவில், சதம் அடித்த ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 105, கேப்டன் சல்மான் அகா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பௌலா்களில் ஜேக்கப் டஃபி 1 விக்கெட் எடுத்திருந்தாா்.
இந்த அணிகள் மோதும் 4-ஆவது டி20 ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) நடைபெறுகிறது.