'ஸ்வீட் ஹார்ட்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

8 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'ஸ்வீட் ஹார்ட்'. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.�

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள 'ஸ்வீட் ஹார்ட்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சிறுவயதிலிருந்து பெற்றோர் இல்லாமல் வளரும் ரியோ ராஜ் பந்தப் பாசத்தின் மீது பற்றுதல் இல்லாமல் இருக்கிறார். திருமணம், குழந்தை என இல்லற வாழ்க்கையில் ஆர்வம் உள்ள நாயகி கோபிகா ரமேஷ், ரியோ ராஜை காதலிக்கிறார். இருவரும் நெருங்கிப் பழகியதால் கோபிகா ரமேஷ் கர்ப்பமடைகிறார். குழந்தையை விரும்பாத ரியோ ராஜ் கருவை கலைத்துவிட சொல்கிறார். கோபிகாவோ கருக்கலைப்பு செய்யமாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார். அதன்பின் நடந்தது என்ன என்பது மீதி கதை.�

ரியோ ராஜ் ரொமன்ஸ் ஹீரோவாக கச்சிதம். காதலியை கொஞ்சுவதும், பிறகு கெஞ்சுவதும் என கதாபாத்திரத்துக்கு தேவையான நியாயம் செய்திருக்கிறார். நள்ளிரவில் ஜன்னல் ஏறி சந்திக்கும் அவமானங்கள் அவருடைய நடிப்புக்கான வெகுமானங்களாக மாறுவது சிறப்பு. கோபிகா ரமேஷ் அழகாக இருப்பதோடு அட்டகாசமாக நடித்தும் இருக்கிறார். நாயகனுக்கு இணையான வேடம் என்பதால் எந்த இடத்திலும் விட்டுகொடுக்காமல் அசத்தியுள்ளார்.

நண்பராக வரும் அருணாசலேஸ்வரன் துவண்டு போகும் நண்பனுக்கு தோள் கொடுக்கும் கேரக்டர். அவரும் அதை கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சீரியஸ் என கலந்துக் கொடுத்துள்ளார். அப்பாவாக வரும் ரஞ்சி பணிக்கர், அம்மாவாக வரும் துளசி, தோழியாக வரும் பவுசி, ரேஷ்மி கார்த்திகேயன், சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் நிறைவு. ரெடின் கிங்ஸ்லி சில நிமிடங்கள் வந்தாலும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசைக்கோர்வை அதைவிட இனிமை.

ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் மாடி வீட்டு அழகை பலவித கோணங்களில் காண்பிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. முதல் பாதியில் விறுவிறுப்பு குறைவு. இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் பலம். இன்றைய காதலர்கள் அனுபவிக்கும் அளவில்லாத இன்பத்தையும், துன்பத்தையும் யதார்த்தமாகவும், கருக்கலைப்பு பிரச்சினையை சமூக கண்ணோட்டத்துடனும் சொல்லி சுவாரஸ்யமான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார்.

Read Entire Article