ARTICLE AD BOX
ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்புகளில் அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு தில்லியில் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 125-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா்.
அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஸ்வீடன் வெளியுறவு அமைச்சா் மரியா ஸ்டெனா்காா்ட், அயா்லாந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா் சைமன் ஹாரிஸ் டினைஸ்டே, ஸ்லோவீனியா வெளியுறவு அமைச்சா் தான்யா ஃபாஜோன், கானா வெளியறவு அமைச்சா் சாமுவல் ஒகுட்செட்டோ அப்லக் உள்ளிட்டோரை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.
‘ரைசினா உரையாடல்’ மாநாட்டுக்கிடையே நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெவ்வேறு பதிவுகளாக பதிவிட்டிருந்தாா்.
இதேபோன்று, நியூஸிலாந்து பிரதமரின் தொழில்துறை, கலாசார குழுவினருடன் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரையும் அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தையும் அமைச்சா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.