ARTICLE AD BOX
தமிழகத்தில் வேளாண்மை செய்து அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கினார். திருக்குறள் மற்றும் புறநானூறு பாடல்களைக் கூறி உரையை தொடங்கினார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகளில்
வேளாண்மை செய்து அதிக விளைச்சலை காட்டும் 3 விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் மூன்று விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாவது விவசாயிக்கு 1.50 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவத்துள்ளார்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணாக்கரை உயிர்மை சுற்றுலா அழைத்துச் சென்று, வேளாண் பணிகளைப் பற்றி விளக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட 'உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்' கொண்டு வரப்படும்.
மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், 'மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்' உருவாக்கப்படும்.
மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு அறிமுகப்படுத்தப்படும்.
நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம் கொண்டுவரப்படும்.
1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர் சாகுடிபக்கு ரூ.12.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60 முதல் 70 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.