ARTICLE AD BOX
மசாலா குழி பணியாரம்
தேவையானவை:
இட்லி அரிசி _400 கிராம் பச்சரிசி _100 கிராம் உளுத்தம்பருப்பு _125 கிராம் வெந்தயம் _1/2 ஸ்பூன் உருளைக்கிழங்கு _250 கிராம் எண்ணெய் _100 மில்லி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா ½ ஸ்பூன் பச்சை மிளகாய் _2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள்பொடி _1/4 ஸ்பூன் பெரியவெங்காயம்_1 (பொடியாக நறுக்கியது) கருவேப்பிலை, மல்லிக்கீரை _ சிறிதளவு (நறுக்கியது)
செய்முறை:
அரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கிரைண்டரில் அரைத்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவு புளித்ததும் நன்கு கலந்துவிட்டு பணியாரத்துக்கு தேவையான மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துவிட்டு மீதி மாவை ஃப்ரிட்ஜில் வைத்துவிடலாம்.
பின்னர் உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் விட்டு 4 விசிலுக்கு வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு கிழங்கை ஆறிய பிறகு நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள் சேர்த்துக்கிளறி மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து உப்பு போட்டு ஒன்று சேரக் கலந்து, பொடியாக நறுக்கிய மல்லிக்கீரையை போட்டு நன்கு கலந்து இறக்கி வேறு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளலாம்.
பின்னர் பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் ¼ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 கரண்டி மாவை ஊற்றிவிட்டு அதன் மேல் மசாலா உருண்டையை வைத்து சற்று அழுத்திவிடவும். பிறகு மசாலா உருண்டையின் மேலே ½ கரண்டி மாவு ஊற்றி விடவும். 2 நிமிடம் வேக விட்டு குச்சி வைத்து திருப்பி போட்டு வேகவிடவும். சூப்பரா பந்து போன்ற மசாலா பணியாரம் தயார்.
வெங்காயத் தொக்கு
தேவையானவை:
பெரியவெங்காயம் _5 சின்னவெங்காயம் _100 கிராம் நல்லெண்ணெய் _3 ஸ்பூன் கருவேப்பிலை _1 கைப்பிடி புளி _ சிறிய நெல்லிக்காய் அளவு முழுமல்லி _1 ஸ்பூன் வெந்தயம் _1/4 ஸ்பூன் சீரகம், கடுகு தலா _1/2 ஸ்பூன் சாம்பார் தூள் _1 ஸ்பூன் பூண்டு _15 பற்கள் பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன் உப்பு _தேவைக்கு
செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு முழுதாகவே சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி கருவேப்பிலை, புளியும் சேர்த்து வதக்கி மூடி போட்டு மூடி மீடியமான தீயில் வைத்து 3 விசிலுக்கு வேகவைத்து ஆறவைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியில் முழுமல்லி, வெந்தயம், சீரகம், கடுகு போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடித்து வைக்கவும். பின்னர் ஆறிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் சாம்பார் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து எடுக்கவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உரித்தப்பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி பெருங்காயத்தூள் சேர்த்து பின்னர் வெங்காய கலவை, உப்பு சேர்த்து கலந்து மூடி போட்டு மூடி 3 நிமிடம் வேகவிடவும். பிறகு அத்துடன் வறுத்து பொடித்து வைத்த மசாலா பவுடரை சேர்த்து எண்ணெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும். சூப்பரான வெங்காயத் தொக்கு தயார்.