ARTICLE AD BOX
பாலாஜியும் சரவணனும் ஒன்றாக படித்து இப்போது கம்பெனியில் வேலையில் இருப்பவர்கள். பாலாஜிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் சரவணனுக்கு அந்த கம்பெனியில் கிடைப்பதில்லை. எதனால் தனக்கு மற்றவர்கள் மதிப்பு தர மறுக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்.
அந்த கம்பெனியின் கடைநிலை ஊழியரை அழைத்தான். "ஐயா என் நண்பன் பாலாஜி எப்படி?" என்று கேட்டான். அந்த ஊழியர் சொன்னார் "சார் இந்த கம்பெனியில் இருப்பவர்களிலேயே மிகவும் அருமையான மனிதர் பாலாஜிதான். காரணம் அவருக்கு கோபம் என்றால் என்னவென்றே தெரியாது. நான் டீ எடுத்து வர கொஞ்ச நேரம் அதிகமாகிவிட்டால் முகம் சுளிப்பவர்களும் முகத்துக்கு நேரே பேசுபவர்களும் இருக்கும் இங்கு சற்று தாமதமாக வருவதால் எந்த வருத்தமும் இல்லை என்று புன்னகையுடன் சொல்பவர் அவர் ஒருவர்தான்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
சரவணனுக்கு இப்போது புரிந்தது. ஏனெனில் சரவணன் மிகப்பெரிய பலவீனம் அவனின் கோபம்தான். அந்த அந்த ஊழியர் சொன்னது போல் டீ எடுத்து வர சற்று தாமதம் ஆகிவிட்டால் அவரை கோபத்துடன் எத்தனையோ முறை கடிந்து கொண்டுள்ளான்.
சரவணன் மட்டுமல்ல வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை இருந்தும் கட்டுப்படுத்த முடியாத தங்கள் கோபத்தினால் முன்னேற முடியாமல் தவிப்பவர்கள் நிறைய பேர். இதில் கோபப்படுபவர்கள் தங்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே கருதுவதை முதலில் தவிர்த்தாலே கோபத்தின் வேகம் மட்டுப்படும். கோபத்தால் சிந்திக்க முடியாமல் பதட்டமான மூளை அமைதியாக கோபத்தின் காரணத்தை ஆராயும்.
வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமா? நமது மனதை கூட நம்மால் கையாள தெரியவில்லை என்றால் எப்படி வெற்றியை நோக்கி செல்லமுடியும்? கோபம் என்பது ஒரு மரத்தின் வேர் போல.
வேர் பரவ பரவ நமது உடலின் செயல்பாடுகள் மழுங்கிபோய் அதீத மனஅழுத்தம் என்பது உண்டாகிவிடும். அதுவே விழிப்புணர்வுடன் இயங்கி நமது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இன்றி ஆரோக்கியமாக வெற்றியை நோக்கி நகர முடியும்.
கோபத்தினால் மற்றவர்களின் நம்பிக்கையை இழக்கநேரிடும். கோபத்தினால் பிறர் உங்களிடம் நெருங்க பயம் கொள்ளுவார்கள் அல்லது புறக்கணிக்க எத்தனிப்பார்கள். யாருமற்ற சமூக சூழலில் எப்படி வெற்றிபெற முடியும்? மற்றவர்களின் ஒத்துழைப்பு இன்றி ஒரு மனிதனால் வெற்றி பெறுவது சாத்தியமற்ற ஒன்று.
ஆனால் கோபத்தை எப்படி தவிர்ப்பது? இதற்கு ஒரு அழகான விளக்கத்தை ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். சுற்றி இருப்பது சகதியாக இருந்தாலும் அதையே தன் உரமாக கொண்டு தாமரை தன்னுடைய பூரண அழகை வெளிப்படுத்துகிறது. நம் வாழ்க்கையும் அப்படித்தான் அமையவேண்டும். சுற்றுப்புறம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உறுதியோடு செயல்பட்டு அதிலிருந்து நமக்கான உரத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அழகாக.
தன் குணம் பற்றி கவனமான நோக்கத்துடன் வாழ்பவர்களால்தான் சிறந்த தலைவர்களாக உருவாகி வெற்றிபெற முடியும். ஆகவே நாமும் கோபத்தைக் கட்டுப்படுத்தி வெற்றியை அடைவோம்.