ARTICLE AD BOX
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்ததாக லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் பிரதீப். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் சக்கை போடுபோட்டு பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப். அந்த வகையில் ஏற்கனவே எல்ஐகே எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இதன் பின்னர் பிரதீப் ரங்கநாதன், சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்தான் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருந்த டிராகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, மீண்டும் டிராகன் பட கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவித்திருந்தார். இந்த தகவல் அறிந்த வேல்ஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாம்.
அதாவது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மற்றுமொரு புதிய படம் நடிப்பதற்கு முன்பாக தங்களுடைய நிறுவனத்திற்கு படம் ஒன்றை பண்ணித் தர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாம். அதுவும் இந்த படத்தை தானே இயக்கி நடித்தாலும் சரி அல்லது வேறொரு ஹீரோவை வைத்து இயக்கினாலும் சரி எதுவாக இருந்தாலும் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாம் வேல்ஸ் நிறுவனம். பிரதீப் ரங்கநாதனும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆகையினால் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.