ARTICLE AD BOX

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக முன்னெடுத்தது. சபாநாயகர் அப்பாவு திமுகவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்குவதில்லை உள்ளிட்ட புகார்களை முன்னிறுத்தினர்.
இன்று கேள்வி பதில் நேரம் முடிந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு பேரவையில் இருந்து வெளியேறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கெடுப்பு நடத்தினார். இதில் ஆளும் திமுகவுக்கே அதிக உறுப்பினர் ஆதரவு இருப்பதால், குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு ஆகியவற்றிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி கண்டது.
இதனை அடுத்து சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுற்றபிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் கட்சி மீது பரபரப்பான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், ” நாங்கள் 2.52 மணிநேரம் பேசினோம். பிறகு நாங்கள் பேசியது குறித்த CD-ஐ கேட்டோம். அவர்களும் தந்தார்கள். ஆனால், அதில் 45 நிமிடங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதிலும் சபாநாயகர் பேசுவது, முதலமைச்சர் பேசுவது தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பேசியது வெறும் 2 நிமிட அளவில் தான் இருந்தது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பதற்கு இதுதான் உதாரணம்.
இப்போது கூட நான் பேசியதை நேரடியாக ஒளிபரப்பவில்லை. முதலமைச்சர் பேசியது தான் நேரடியாக ஒளிபரப்பானது. சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்தால் அவருக்கான என்ன வேலையோ அதனை தான் செய்ய வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு இல்லாமல் இரு தரப்புக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும். சபாநாயகர் பணி புனிதமான பணி.
நாங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினால் சபாநாயகர் பதில் சொல்கிறார். அதனை நாங்கள் கேட்டால், நான் அந்த பகுதியை சேர்ந்தவன் என கூறுகிறார். அப்படியென்றால் அவர் ஆளும் கட்சி பக்கம் நின்று தான் பேச வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே முதல் நோக்கம்.
தீர்மானம் வெற்றி தோல்வி என்பதை விட நாட்டு மக்களுக்கு இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் தீர்மானம் கொண்டு வந்தோம்.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மட்டுமே ஆளும் கட்சி. மற்ற எல்லாரும் எதிர்க்கட்சி தான். தோழமை கட்சி என்பதெல்லாம் வெளியில் தான். தீர்மானத்தில் எப்போது போல இதனை திசை திருப்பவே பதில் சொல்கின்றனர். சபாநாயகர் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று எதையும் பார்க்க கூடாது. ஆனால், தீர்மானம் முடிந்து வந்த சபாநாயகர் மீண்டும் அதே நிலையில் தான் இருக்கிறார். இது எங்களுக்கு வேதனையை தருகிறது.” என பேசினார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.