ARTICLE AD BOX
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. சுடுமண் முத்திரைகள், வட்ட சில்லுகள், மண் குவளைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்து உள்ளன.
இந்நிலையில் அகேட் என்னும் கல்மணி, பச்சை நிறத்திலான கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சதுரங்க ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை தற்போது கிடைத்துள்ளன. இதில் கல்மணி, கண்ணாடி மணி ஆகியவை ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் சிறிய அளவில் கிடைத்தன. தற்போது பெரிய அளவில் கிடைத்துள்ளது.
இதன்மூலம் தொன்மையான மனிதர்கள் விலைமதிப்பற்ற அகெட் போன்ற அணிகலன்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை முற்காலத்தில் ஆபரணமாக பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். இதுவரை 3,600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.