ARTICLE AD BOX
சில வீடுகளில் வீட்டுக்குள் இருந்தே மாடிப்பகுதிக்கு படிக்கட்டுகளை அமைத்திருப்பார்கள். இதற்கு அடியில் உள்ள இடத்தை வீணாக்காமல் எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் இந்தப் பகுதியை அழகாகவும், சிறந்த பயன்பாட்டுக்காகவும் மாற்ற முடியும்.
படிக்கட்டுகளின் கீழ் அலமாரி மற்றும் ஷூ ரேக்:
படிக்கட்டுக்கு அடியில் உள்ள இடத்தை வீட்டை துப்புரவு செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள், காலணிகள், மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் கோட்டுகள், ஜாக்கெட்டுகள் போன்றவற்றை சேமித்து வைக்க அலமாரிகளை அமைத்து அதில் கொக்கிகளை பொருத்தி ஜாக்கெட்டுகள், கோட்டுகளை தொங்க விடலாம். அலமாரிகளில் செருப்புகள், ஷூ பாலிஷ் பொருட்கள், துப்புரவு செய்வதற்கான பிரஷ், துடைப்பம் போன்ற பொருட்களையும் வைக்கலாம்.
டிராயர்கள்:
சின்னச் சின்ன பொருட்களை சேமித்து வைக்க படிக்கட்டுகளுக்கு அடியில் டிராயர்களை அமைத்து அலங்கார பொருட்கள், புத்தகங்கள், பொம்மைகள், கைவினைப் பொருட்களை சேமிக்கலாம்.
வாசிப்பு இடம் (குட்டி லைப்ரரி):
புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் படிக்கட்டுகளுக்கு அடியில் சிறிய நூலகத்தை உருவாக்கலாம். படிக்கட்டுகளுக்கு அடியில் அழகாக ஒரு சின்ன டேபிள், சேர் போட ஓய்வு நேரங்களில் புத்தகங்களை படிக்க வசதியாக இருக்கும். புத்தகங்களை நேர்த்தியாக அடுக்கி, அலங்கார விளக்குகள் சூழ அமைதியாக அமர்ந்து படிப்பதே மனதிற்கு இதம் தரும்.
உட்புற தோட்டம்:
படிக்கட்டுகளுக்கு அடியில் அழகான ஒரு உட்புற தோட்டத்தை உருவாக்கலாம். அந்த இடத்திற்கு ஏற்றவாறு சின்னச் சின்ன தொட்டிகளில் குரோட்டன்ஸ் போன்ற அழகு செடிகளை வைக்கலாம். அலங்காரத் தொட்டிகள், செடி ஸ்டாண்டுகளை அமைக்கலாம். தொங்கும் தொட்டி செடிகளையும் வைக்கலாம். அதிகம் வெயில் தேவைப்படாத ஐவி, பீஸ் லில்லி போன்ற செடிகளை வைக்கலாம். அப்பகுதியில் வெயில் விழுமானால் மூலிகை தாவரங்களையும், சின்ன சின்ன புதினா, கொத்தமல்லி போன்ற செடிகளையும் அமைத்து விட வீட்டிற்கு அழகு சேர்ப்பதுடன், அமைதியான சூழ்நிலையையும் உருவாக்கும்.
குழந்தைகளுக்கான விளையாட்டு அறை:
படிக்கட்டுகளுக்கு அடியில் இருக்கும் இடத்தை வீணாக்காமல் குழந்தைகள் விளையாட்டு அறையாக மாற்றலாம். குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் மற்றும் குழந்தைகள் அமரக்கூடிய வகையில் சின்ன மேஜை மற்றும் நாற்காலி போட்டு, சுவர்களில் அழகான ஓவியங்களைப் பொருத்தலாம்.அதுவும் உங்கள் பிள்ளைகள் வரைந்த அழகான ஓவியங்களாக இருந்தால் இன்னும் சிறப்பு.
தியான அறை:
மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்கும் தியான அறையை உருவாக்கலாம். வசதியான மெத்தை அல்லது யோகா பாயை விரித்து அருகில் அழகான செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்து விட மனம் இனிமையான சூழ்நிலையில் அமைதி காணும். தியானம் செய்வதற்கும், யோகா பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும்.