ARTICLE AD BOX
நம் வீட்டில் தெய்வீக சக்தி இருப்பதை எப்படி சில மங்களகரமான விஷயங்கள் நடப்பது மூலமாக தெரிந்துக் கொள்ளலாமோ அதுப்போல நம் வீட்டில் தீய சக்திகள் இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம். அவற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. நம் வீட்டில் இருக்கும் பல்லியை ‘மினி ஜோசியர்’ என்றே கூறலாம். பல்லிகள் சில குறிப்பிட்ட திசையில் இருந்து சத்தம் எழுப்பும் போது அதை வைத்து நல்ல விஷயங்கள் நடக்கப் போவதை கணிக்கலாம். அதுப்போலவே பல்லி நம் மீது விழுவதை வைத்து சாஸ்த்திர பலன்களைக் கூறுவார்கள். இத்தகைய தெய்வீக சக்தி நிறைந்த பல்லி வீட்டில் அடிக்கடி இறந்துப் போய்க் கிடக்கிறது என்றால், அந்த வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீயசக்திகள் இருப்பதாக அர்த்தம்.
2. நம் வீட்டில் உள்ள மங்களகரமான பொருட்களில் கண்ணாடியும் ஒன்றாகும். இது நேர்மறை ஆற்றலை தரக்கூடிய பொருளாகும். மேலும் எதிர்மறையான சக்திகளை ஈர்க்கக்கூடியது. அத்தகைய கண்ணாடி அடிக்கடி உங்கள் வீட்டில் உடைகிறது என்றால், அந்த வீட்டில் தீய சக்திகள் இருப்பதாக பொருளாம்.
3. கருவண்டு, வௌவால், பாம்பு போன்ற உயிரினங்கள் அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறது; குறிப்பாக நீங்கள் தூங்கிய பிறகு வருகிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
4. வீட்டில் உள்ள பெண்களுக்கு தலைமுடி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கொட்டுவதும் இதற்கான அறிகுறியாகும். பெண்களுக்கு அதிகமாக மாதவிடாய் ஏற்படுவது, வீட்டில் சமைக்கும் உணவுகளில் சுவை இல்லாமல் இருப்பது; அந்த உணவை சாப்பிடுவதால், வீட்டில் உள்ள நபர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது போன்றவை அந்த வீட்டில் தீயசக்திகள் இருப்பதை உறுதி செய்யும் அறிகுறிகளாகும்.
5. வீட்டில் இருந்து கெட்ட வாடை எந்நேரமும் வீசிக் கொண்டேயிருக்கும். வீட்டில் உள்ளவர்கள் எப்போதுமே சோர்வாகவே உணர்வார்கள். வீட்டில் ஆங்காங்கே ஒட்டடைகள் தென்படும். இவை அனைத்துமே வீட்டில் எதிர்மறை சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
நம்முடைய வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறையான சக்தி வருவதற்கு, நம் வீட்டை நன்றாக சுத்தமாக பராமரிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெண்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இறை வழிப்பாட்டை எந்நேரமும் தொடர்ந்து செய்து வருவது நேர்மறையான சக்திகளை அதிகரித்து குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.