ARTICLE AD BOX

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் குனியமுத்தூர் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது ஒரு வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 22 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இதைத்தொடர்ந்து அவற்றை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்கள் கலைவாணன் (21), விஷ்ணு (19), தனுஷ் (19), அபிநவ் (19), அனிருத் (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சமீபத்தில் சென்னையில் மெத்தபைட்டபின் என்ற போதை பொருளை கல்லூரி மாணவர்கள் சிலர் வீட்டில் வைத்து ஆய்வகம் அமைத்து தயாரித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கஞ்சா செடி வளர்த்ததில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.