விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன்: தமிழக வேளாண் பட்ஜெட் 2025 சிறப்பு அம்சங்கள்

19 hours ago
ARTICLE AD BOX

Published : 16 Mar 2025 07:55 AM
Last Updated : 16 Mar 2025 07:55 AM

விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன்: தமிழக வேளாண் பட்ஜெட் 2025 சிறப்பு அம்சங்கள்

<?php // } ?>

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.160 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மொத்தத்தில் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தமிழக வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய அவர் 11.10 மணிக்கு நிறைவு செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2019-20 நிதி ஆண்டில் 1.47 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 3.23 லட்சம் ஏக்கர் அதிகரித்து, 2024-25-ம் ஆண்டில் 1.50 கோடி ஏக்கராக உயர்ந்துள்ளது. பயிர் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கேழ்வரகு உற்பத்தி திறனில் தமிழகம் தேசிய அளவில் முதல் இடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய் வித்துகள், கரும்பு ஆகியவற்றில் 2-ம் இடத்திலும், நிலக்கடலை, குறுதானியங்கள் உற்பத்தி திறனில் 3-ம் இடத்திலும் உள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 10,187 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு, 46 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் ரூ.787 கோடி ஒதுக்கீட்டில் 50.71 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக் குடில், வேளாண் இயந்திரங்கள் போன்ற திட்டங்களில் அதிகபட்சம் 70 சதவீத மானியம் பெறும் வகையில், ரூ.61.12 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை 15,800 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இயற்கை பேரிடரால் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் 20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,632 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு இழப்பீடாக 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைக்காக வரும் 2025-26-ம் நிதி ஆண்டில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். வட்டி மானியத்துக்கு ரூ.853 கோடி, பயிர் கடன் தள்ளுபடிக்கு ரூ.1,477 கோடி ஒதுக்கப்படும். வேளாண் சார்ந்த கால்நடை வளர்ப்பு, மீன், தேனி வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மூலதன கடன் வழங்கப்படும்.

வேளாண் பட்டதாரிகள் மூலம் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் ஆலோசனைகள் வழங்க 1,000 இடங்களில் ரூ.42 கோடியில் முதல்வரின் ‘உழவர் நல சேவை மையங்கள்’ தொடங்கப்படும்.

நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க டெல்டா மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில் 34 லட்சம் ஏக்கரிலும் ரூ.160 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க ரூ.525 கோடி ஒதுக்கப்படும்.

இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்பில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.841 கோடியில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

* எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் புதிய கண்டுபிடிப்புக்கான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூ.1 கோடி ஒதுக்கப்படும்.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் விபத்து உயிரிழப்பு இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கான நிதியுதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், இறுதிச்சடங்கு செலவுக்கான நிதியுதவி ரூ.2,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

* முதல்முறையாக ரூ.10 கோடியில் முந்திரி வாரியம் உருவாக்கப்படும்.

* 20 உழவர் சந்தைகளில் பசுமை காய்கறிகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ள, இணைய வர்த்தக தளத்துடன் இணைக்கப்படும்.

* முதல்வரின் ‘மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்’ திட்டம் ரூ.142 கோடியில் செயல்படுத்தப்படும்.

* ரூ.50 கோடியில் 11 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

* ரூ.35 கோடியில் ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

* காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநில பகுதிகளிலும், கல்லணை பகுதிகளிலும் ‘சி’, ‘டி’ கால்வாய்களில் எஞ்சியுள்ள 2,925 கி.மீ. நீளத்துக்கு ரூ.13.80 கோடியில் தூர்வாரப்படும்.

* முக்கிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு

* 3 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய, உழவு மானியமாக ரூ.24 கோடி.

* 3 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்த ரூ.1,168 கோடி.

* 17 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்துக்கு ரூ.215 கோடி.

* வேளாண் விளைபொருட்களுக்கு 100 மதிப்பு கூட்டு அலகுகள் அமைக்க ரூ.50 கோடி.

* ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு 100 முன்னோடி விவசாயிகளை கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்ல ரூ.2 கோடி ஒதுக்கப்படும்

மொத்தத்தில் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

* கம்பு, மக்காச்சோள ‘பொக்கே’

பட்ஜெட் நிகழ்வில் பங்கேற்பதற்காக பேரவைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட வேளாண் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ‘நாட்டு பொக்கே’வை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அவர் மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article