விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2 வருடங்களுக்கு முன்பு ரூ.6,431 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள் நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது.

இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த திட்டம் விழுப்புரத்தில் 16 கிராமங்கள், கடலூரில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தமாக 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது. இந்நிலையில் சாலை பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிந்த நிலையில் வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் - புதுச்சேரி சாலை

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை ஜானகிபுரம் கூட்ரோட்டில் துவங்கி வளவனுார் விவசாய நிலங்கள் வழியாக 16 கி.மீ., புறவழிச் சாலையாக கெங்கராம்பாளையத்தை அடைகிறது. அங்கிருந்து மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பம் வரை 45 மீட்டர் அகல சிமென்ட் சாலைகளாக மாற்றப்படுகிறது. எம்.என்.குப்பத்தில் இருந்து விவசாய நிலம் வழியாக கடலுார் மாவட்டம் செல்கிறது. இதில், மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், திருபுவனை, கண்டமங்கலம், அரியூர், எம்.என்.குப்பத்தில் மேம்பாலம் அமைகிறது. கண்டமங்கலத்தை தவிர்த்த மற்ற இடங்களில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது.

எம்.என்.குப்பம் - கடலுார் குடிகாடு

எம்.என்.குப்பத்தில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து செல்லும் நான்கு வழிச்சாலை, மங்கலம், உறுவையாறு, கோர்க்காடு, பரிக்கல்பட்டு, குருவிநத்தம், அரங்கனுார், சேலியமேடு, பாகூர் வழியாக, கடலுார் வடபுறம் கீழ்பாதியை அடைக்கிறது.

அங்கிருந்து, உடலப்பட்டு, புதுக்கடை, இளஞ்சிப்பட்டு, நத்தப்பட்டு, கோண்டூர், பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, திருவந்திபுரம், ராமாபுரம் வழியாக, 33.6 கி.மீ., துாரம் கடந்து, கடலுார்-சிதம்பரம் சாலையில் கடலுார் சிப்காட் குடிகாடு அருகே இணைகிறது. இந்த பாதையில் கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆற்றில் இரண்டு மெகா பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடலுார் - நாகப்பட்டினம்:

கடலுார் சிப்காட்டில் இருந்து சிதம்பரம் வரை பழைய சாலையை அகற்றி புதிய சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. சிதம்பரம் புறவழிச்சாலை துவங்கி, கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்துடன் புறவழிச்சாலை அமைகிறது.சீர்காழி சட்டநாதபுரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர், பொறையார் வழியாக காரைக்காலுக்கு வெளியே புறவழிச் சாலையாக கடந்து, நாகப்பட்டினத்தை அடைகிறது.

95 சதவீத பணி

விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரையிலான சாலை பணிகள் தற்போது முடிந்துள்ளது. எம்.என்.குப்பத்தில் இருந்து கடலுார் சிப்காட் வரையிலும், கடலுார் - சிதம்பரம் இடையிலான பணிகள் முடிந்துள்ளது. இந்த மூன்று பணிகளும் கடந்த நவம்பர் மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை பணிகள் சற்று தொய்வு அடைந்தது. இந்தநிலையில் தற்போது விறுவிறுப்பாக நடப்பதால், ஒரு சில மாதத்திற்குள் முழு பணிகள் முடிந்து நான்கு வழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.