ARTICLE AD BOX
விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார் – விலை எவ்வளவு தெரியுமா?
டெல்லி: எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தங்களுடைய மின்சார கார்களை விற்பனை செய்ய இருக்கிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நீண்ட காலமாகவே இந்த நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிக்க விருப்பம் காட்டி வருகிறது. ஆனால் இந்தியாவில் அதிக வரி இருப்பதால் டெஸ்லாவால் இங்கே நுழைய முடியவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு டெஸ்லா நிறுவன கார்கள் இந்திய சந்தையில் விற்பனையை தொடங்கும் வகையில் மின்சார வாகன கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து இறக்குமதி வரியை குறைத்துள்ளது. இதன் மூலம் டெஸ்லா இந்தியாவில் விற்பனையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இந்தியாவில் தங்கள் நிறுவன மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்காக நிலையங்களை அமைக்க இருக்கிறது. இது தொடர்பாக வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து தான் இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்கள் விற்பனைக்கு வருவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதனால் இந்தியாவில் ஏற்கனவே மின்சார கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.
இந்நிலையில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் எவ்வளவு கட்டணத்தில் விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. CLSA என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் டெஸ்லா நிறுவனத்தின் Model 3 கார்கள் இந்தியாவில் 35 லட்சம் 40 லட்சம் ரூபாய் கட்டணத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களிலேயே குறைந்த விலை கொண்டது Model 3 கார்கள் தான். அமெரிக்காவில் அதன் விலை 35,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் இது 30.4 லட்சம் ரூபாய்.
காரின் விலை தவிர காப்பீடு மற்றும் சாலை வரி உள்ளிட்டவற்றை சேர்க்கும்போது 35 லட்சத்திலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை டெஸ்லா நிறுவன Model 3 கார்கள் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களை விட இதன் விலை அதிகமாக இருப்பதால் உடனடியாக டெஸ்லா நிறுவன கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருக்காது.
அரசின் மின்சார வாகன கொள்கை படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை அமைக்கும்பட்சத்தில் அதன் உற்பத்தி விலை குறையும், இறக்குமதி வரியும் இருக்காது எனவே இந்திய சந்தைக்கு ஏற்ப காரின் விலையை குறைக்கலாம். ஆனால் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். தற்போதைக்கு டெஸ்லா தங்களின் கார்களை இறக்குமதி செய்து தான் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. முதலில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் தங்களுடைய விற்பனை நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
Story Written: Devika