ARTICLE AD BOX
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதாக துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மொத்த சரக்குகளை கையாளும் தளங்களான வடக்கு சரக்கு தளம் 2-இல் 120 டன் திறன் கொண்ட 2 நகரும் பளுதூக்கிகள் மற்றும் சரக்குதளம் 1 முதல் 5 வரை 3 நகரும் பளுதூக்கிகள் சுழற்சி முறையில் செயல்பட்டு நாளொன்றுக்கு 45 ஆயிரம் டன் சரக்குகளை வெளியேற்றும் வசதியைப் பெற்றுள்ளது.
மேலும், மொத்த சரக்குகளை அதிகமாக கையாளுவதற்கு வசதியாக 240 மீட்டர் நீளமுடைய இணைப்பு கன்வேயர் அமைப்பை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையத்தின் கன்வேயர் அமைப்புடன் இணைத்து நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கரி கையாளும் திறன் ஆண்டுக்கு 7 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியது: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 30- ஆம் தேதி 2 லட்சத்து 4 ஆயிரத்து 512 டன் சரக்கு ஒரே நாளில் கையாண்டது சாதனையாக இருந்தது. இந்த சாதனையானது, கடந்த 23-ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 650 டன் சரக்குகளை கையாண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சரக்குதளம் 3-இன் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அதன்பின்னர் மொத்த சரக்குகள் நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்படும். ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகள் வெளியேற்றத்திற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் -3 முழுவதும் இயந்திரமயமாக்கும் திட்டம் வரும் 2026 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.