விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

2 hours ago
ARTICLE AD BOX

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று(மார்ச் 19) அதிகாலை 3.30 மணியளவில் பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

286 நாள்கள் விண்வெளியில் ஆராய்ச்சியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமிக்கு திரும்பியதும் அனைவரும் வாழ்த்து தெரிவித்தும், அவரது சொந்த ஊரான குஜராத்தில் பட்டாசு வெடித்தும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

இதுபற்றி சுனிதா வில்லியம்ஸின் உறவினர் 59 வயதான ஃபால்குனி பாண்டியா பேசுகையில், “சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினரை டிராகன் விண்கலம் பூமிக்கு அழைத்து வந்தது நம்பமுடியாததாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் விரைவில் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

அவரது குடும்பத்தினர் விடுமுறையில் இங்கு வர திட்டமிட்டுள்ளனர். குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடப் போகிறோம் என்று கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுனிதா வில்லியம்ஸ் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுனிதா வில்லியம்ஸுக்கு எழுதியிருந்த கடிதத்தில், “நீங்கள் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் இருந்தாலும், தொடர்ந்து எங்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும் வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்கள்!

Read Entire Article