ARTICLE AD BOX
செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண்கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,600-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.
தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 24.9 செ.மீ நீளமும், 12.6 செ.மீ விட்டமும், 6.68 கிராம் எடை கொண்ட சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வில் முதல் முறையாகக் கிடைக்கப்பெற்ற பதக்கம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும், இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 27.7மி.மீ உயரமும், 25.5 மி.மீ விட்டமும் கொண்ட இந்த ஆட்டக்காயின் வடிவம் ஒருபுறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் கொண்டதாக இருப்பது வியப்பளிக்கிறது என தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை "வெம்பக்கோட்டை விசித்திரக்கோட்டை" என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.