விராட் கோலி சதம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

2 hours ago
ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 242 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. அதிரடியாக விளையாட முயன்ற கேப்டன் ரோஹித் சர்மா 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் போல்டானார். இதையடுத்து விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்தார். ஷாகீன் ஷா அப்ரிடி வீசிய 7-வது ஓவரில் ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள் விளாசி அசத்தினார்.

ஷுப்மன் கில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் ரவூப் பந்தில் கொடுத்த கேட்ச்சை குஷ்தில் ஷா கோட்டைவிட்டார். தொடர்நது ஹாரிஸ் ரவூப் விசிய 13-வது ஓவரில் விராட் கோலி 2 பவுண்டரிகள் விளாசினார். சீராக ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் 52 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் அப்ரார் அகமது பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஷுப்மன் கில் ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

அப்போது அணியின் ஸ்கோர் 17.3 ஓவர்களில் 100 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஸ்ரேயஸ் ஐயர் 63 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் தனது 21-வது அரை சதத்தை கடந்தார். வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர், குஷ்தில் ஷா பந்தில் இமாம் உல் ஹக்கின் சிறப்பான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 114 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து அக்சர் படேல் களமிறங்கினார்.

அபாரமாக விளையாடிய விராட் கோலி 111 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 51-வது சதமாக அமைந்தது. அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்களும், அக்சர் படேல் 3 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்தத் தொடரில் இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் 6விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி ‘பி‘ பிரிவில் முதல் அணியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Read Entire Article