ARTICLE AD BOX
வாரம் ஒரு திரில்லர் என்ற கணக்கில் இறங்கி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மலையாளத்தில். பார்த்துப் பழகிய கதைகளெல்லாம் திரைக்கதையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து மினிமம் வெற்றிக்கு நாங்கள் கியாரண்டி என்று செயல்பட்டு வருகிறார்கள். அப்படி வந்திருக்கும் ஒரு படம் தான் ஆபீசர் ஆன் டூட்டி.
போலீஸ் விசாரணைப் படங்களுக்குக் குறைவே இல்லை அவ்விடத்தில். மற்றுமொரு போலீஸ் படமா என்று யோசிக்க விடாமல் முதல் காட்சியில் இருந்தே கட்டிப் போடுகிறார்கள். பெங்களூரில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடிதம் எழுதி வைத்துத் தூக்கில் தொங்குகிறார். ஐந்து நபர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கட் செய்தால் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு காவல் நிலையத்தில் அடகு வைத்த செயின் கவரிங் என்று குற்றம் சாட்டுதலோடு வந்து நிற்கிறார் ஒரு பஸ் கண்டக்டர் சந்திரபாபு (ஜெகதீஷ்).
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக டி எஸ் பி யிலிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவிக்குறைப்பு செய்யப்பட்டு அன்று சார்ஜ் எடுக்க வருகிறார் ஹரிஷங்கர் (குஞ்சாக்கோ போபன்). இதைப் பற்றி விசாரிக்கச் சொல்லி ஆள்களை அனுப்புகிறார். கரடுமுரடான யாருக்கும் கட்டுப்படாத அவர்மேல் ஒரு கண் வைக்கச் சொல்லி மேலதிகாரிகள் சொல்லி வைக்கின்றனர். கோபம் தவிர தனிப்பட்ட ஒரு பிரச்சினையிலும் இருக்கும் இவர் தனது மனைவி கீதா (ப்ரியா மணி) சிறிய மகள் என வாழ்ந்து வருகிறார். சாதாரண செயின் பிரச்சினையாக ஆரம்பிக்கும் இந்த விவகாரம் அவரது முதல் விசாரணையிலேயே சற்று பெரிய விவகாரமாக உருவெடுக்கிறது. இதில் கிடைக்கும் சில விஷயங்களை உயரதிகாரிகள் இவருக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்ன? காவல் அதிகாரி தற்கொலைக்கும் இந்தச் செயின் விவகாரங்களுக்கும் என்ன தொடர்பு? தனது சொந்தப் பிரச்சினைகளுக்கும் இதற்கும் இருக்கும் முடிச்சு என்ன எனப் பல கேள்விகளுக்கு விடை சொல்வது தான் ஆபிசர் ஆன் டூட்டி.
முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுவதால் நான் லீனியராகக் கதை சொல்லப்பட்டாலும் காட்சிகளைக் கோர்வையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. சாதாரண போலீஸ் விசாரணையாக ஆரம்பிக்கும் கதை ஒரு கட்டத்தில் வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையேயான ஆடு புலி ஆட்டமாக மாறிவிடுகிறது. விசாரணையிலிருந்து ஆக்க்ஷன் படமாக மாறுவது இந்தக் கடைசி முக்கால் மணி நேரம் தான்.
அந்த நாற்பத்தி ஐந்து நிமிடங்களும் இப்படித் தான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும் இருக்கைநுனியில் அமர வைத்து விடுகிறார்கள். இதற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ்பிஜாய். எடிட்டர் சம்மன் சாக்கோ இருவரும் உறுதுணையாக இருக்கின்றனர். சண்டைக்காட்சிகளும் பரபரவென்று செல்கின்றன. பெங்களூர் கார் துரத்தல் காட்சிகளும் மார்ச்சுவரியில் நடக்கும் சண்டையும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் அதகளம். ராபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஹீரோ என்பதால் அடித்துத் துவைப்பது போலக் காட்டாமல் அவரையும் வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.
தங்க நகை பறிப்பு, போதைக்கடத்தல், பாதை மாறிய இளைஞர்கள் எனப் பல கோணங்களில் கதை சென்றாலும் அந்தக் கவரிங் நகைகுறித்த விசாரணையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அனைத்துச் செயல்களும் சந்திக்கும் புள்ளியை உணர்ந்ததும் எதிர்பார்த்த முடிவை நோக்கி நகர்கிறது படம்.
குஞ்சாக்கோ போபன் ஒரு முரட்டு இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் கேள்வி கேட்காமல் நம்பலாம். முரட்டுத்தனத்தோடு தனது கோபத்தால் ஏற்பட்ட இழப்பை இயலாமையோடு அவர் எதிர்கொள்ளும் இடங்கள் அவர் நடிப்புக்கு உதாரணம். முரட்டு இளைஞர்களாக வரும் ஐந்து பேர் கச்சிதம். முரடர்களாக இருக்கும் அளவு மூளையுள்ளவர்களாக அவர்களைக் காட்டாதது ஒரு குறை. இவர்கள் நடந்து கொள்ளும் விதங்களும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வேட்டையாடு விளையாடு படத்தை அதிகமாக நினைவூட்டுகின்றன.
மலையாளத்தில் வெளியான போதே வெற்றி பெற்ற படமாக இருந்தாலும் காட்சிகள் நேரங்கள் சரியாக அமையாததால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது தமிழில் மொழிமாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். இந்தப் படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப். ஷாஹி கபீர் போன்ற ஒரு நல்ல கதாசிரியர் அமைந்து நல்ல திரைக்கதையும் கிடைக்க முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.
திரையரங்கு செல்ல நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு அடுத்த வாரம் நெட்ப்ளிக்சில் வெளியாகிறது. அதனால் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு இருந்தாலும் வெளியிட மறுக்கப்பட்டதாகக் கேள்வி. வேறு பெரிய படங்கள் இல்லாததால் தமிழ் டப்பிங்கை வெளியிட்டுக் கல்லா கட்ட நினைத்துள்ளனர். வார இறுதியில் இரண்டே காட்சிகள் கொடுக்கப்பட்டாலும் அரங்கு நிறைந்து இருந்தது. அதுவே இந்தப் படத்தின் பாப்புலாரிடிக்கு சான்று.