ARTICLE AD BOX

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நடிகர் சிம்பு அனைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா, கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானது. இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு வெளியானது. தெலுங்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிம்பு மற்றும் த்ரிஷா கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இரு மொழியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் பின்பு இந்தியில் ரீமேக்கானது. இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.'இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?' என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.
மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீட்டிலேயே இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்துள்ளது. இதுவே, மறுவெளியீட்டில் ஆயிரம் நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா. இந்த நிலையில், விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுதொடர்பாக நடிகர் சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
#15yearsofVTV 🤍💙 pic.twitter.com/ElyfgVNtfm
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2025
அதில், வி.டி.வி. கணேஷ் மற்றும் சிம்பு ஆகியோர் பேசுகின்றனர். முதலில் வி.டி.வி. கணேஷ், ‘இந்த படம் ஒரு ஐகானிக் ஃபிலிம். சில சமயம் தான் இந்த மாதிரி படங்கள் அமையும். அன்னைக்கே அந்த படம்...” என பேசிக் கொண்டிருக்க குறுக்கிட்ட சிம்பு, “விட்டா பேசிட்டே இருப்பாரு. 15 வருஷம் விண்ணைத்தாண்டி வருவாயா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஃபர்ஸ்ட் ரிலீஸப்பவும் சூப்பட் ஹிட் பண்ணீங்க. செகண்ட் ரிலீஸப்பவும் 1000 நாட்கள் கடந்து ஓடிக்கிட்டிருக்கு. ஒரு மேஜிக்கல் ஃபிலிம். உண்மையிலே எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்” என்றார்.
பின்பு இப்படத்தில் வரும் வசனமான “இங்க என்னா சொல்லுது, ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா” என வி.டி.வி. கணேஷ் சிம்பு மனதை தொட்டு சொல்ல அதற்கு சிம்பு, “இப்பலாம் இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லல. வேற சொல்லுது. அப்பறம் சொல்றேன்” என முடித்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் நடித்ததன் மூலம் வி.டி.வி. கணேஷ் என்று ரசிகர்களால் அறியப்படுகிறார் தயாரிப்பாளர் கணேஷ்