ARTICLE AD BOX
வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சுழல் 2 வெப் தொடர் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டு வெளியான சுழல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விறுவிறுப்பான அதே சமயம் முக்கியமான சமூக கருத்தை பேசி இருந்த சுழல் வெப் தொடரின் முதல் பாகம் பலராலும் பாராட்டப்பட்டது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் போன்றவர்கள் முதல் பாகத்தில் நடித்து இருந்தனர். தற்போது வெளியாகியுள்ள 2ம் பாகம் இன்னும் அதிக நடிகர்கள் மற்றும் பொருட்செலவுடன் உருவாகி உள்ளது.
சுழல் 2 வெப் தொடரை புஷ்கர் - காயத்திரி எழுத, பிரம்மா மற்றும் சர்ஜீன் ஆகிய இரண்டு பேர் இயக்கி உள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்து இருக்கும் இந்த தொடருக்கு ஆபிரகோம் ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கவுரி கிருஷ்ணன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா, ஷிரிஷா, அபிராமி, நிகிலா ஷங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், சாந்தினி, அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்து இருந்த கதிர் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் தவிர வேறு யாரும் இந்த தொடரில் இடம் பெறவில்லை.
மேலும் படிக்க | எதிர்பார்க்காத இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ்! படம் கண்டிப்பா ஹிட்தான்..
வெப் தொடரின் கதை
முதல் பாகத்தின் இறுதியில் கதிரின் துப்பாக்கியை வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சித்தப்பாவை கொலை செய்து விடுவார். அதிலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. இந்த கொலை வழக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவாக, எப்படியாவது அவரை வெளியே எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் லால் முயற்சி செய்கிறார். கிட்டத்தட்ட இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வேளையில் லால் அவரது ரிசார்ட்டில் இறந்து கிடக்கிறார். லால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்கின்றனர். இந்த வழக்கு சஸ்பெண்ட்டில் இருக்கும் கதிரிடம் வருகிறது. சிறுவயதிலிருந்து லாலுடன் நெருக்கமாக இருக்கும் கதிர் இவரை யார் கொலை செய்திருப்பார்கள் அல்லது இது உண்மையில் தற்கொலை தானா என்ற கோணத்தில் விசாரணை செய்கிறார். இறுதியில் இது கொலையா அல்லது தற்கொலையா, இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை பற்றி சுவாரசியமாக சொல்லி இருக்கும் கதைதான் சுழல் 2.
மிஸ்டரி, சஸ்பென்ஸ், திரில்லர், குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை என பலவற்றை பற்றி பேசியிருக்கிறது இந்த சுழல் 2. புஷ்கர் மற்றும் காயத்ரி தாங்கள் சிறந்த இயக்குனர்கள் மட்டும் இல்லை, சிறந்த திரைக்கதை எழுத்தாளர்கள் என்பதை இந்த தொடரின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர். எட்டு எபிசோடுகள் உள்ள இந்த வெப் தொடர் பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரசியங்களை அதிகப்படுத்துகிறது. ஆரம்பத்தில் கொலைக்கான விசாரணை தொடங்கி இறுதியில் அதனை சுற்றியுள்ள உண்மைகள் வெளியாகும் வரை விறுவிறுப்பாக நகர்கிறது.'
சர்க்கரை என்ற கதாபாத்திரத்தில் கதிர் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட இவரை வைத்து தான் மொத்த தொடரும் நகருகிறது. இவரை தாண்டி சரவணன் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் நல்லவரா கெட்டவரா என்று கடைசி வரை யூகிக்க முடியாத அளவிற்கு இன்ஸ்பெக்டர் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் லால் தங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரங்களில் எட்டு இளம் பெண்கள் நடித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அந்த எட்டு பேரில் கௌரி கிஷன் மற்றும் மோனிஷா மட்டுமே தெரிந்த முகங்கள் என்றாலும் மற்ற அனைவருமே நல்ல ஒரு நடிப்பை கொடுத்திருந்தனர்.
சர்ப்ரைஸ் ஆக இந்த தொடரில் மஞ்சிமா மோகன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மொத்த தொடரில் இரண்டு எபிசோடுகள் மட்டுமே வந்தாலும் மனதில் படியும் படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு கொலையை கண்டுபிடிக்கும் கதையாக நகரும் இந்த சுழல் 2 பிறகு குழந்தை கடத்தலில் முடிகிறது. நிறைய இடங்களில் இடம் பெற்றிருந்த ட்விஸ்ட் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது. ஜெயிலில் நடக்கும் காட்சிகள் அனைத்தும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்டும் யாரும் எதிர்பார்க்காத படி இருந்தது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மொத்த வெப் சீரிஸ்க்கும் பக்க பலமாக உள்ளது.
கதை தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் படி எடுக்கப்பட்டிருந்தாலும் நிறைய காட்சிகளை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தான் எடுத்துள்ளனர். அது வெப் தொடரை பார்க்கும்போது நம்பகத்தன்மையை இழக்கிறது. ஒரு சில எபிசோடுகள் சற்று தொய்வாகவே இருந்தது. முதல் பாகத்தில் இருந்த நேர்த்தி இரண்டாம் பாகத்தில் இல்லை. பல இடங்களில் தங்களுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் அமைத்துள்ளனர் கதை ஆசிரியர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி. அதே போல படத்தில் முக்கியமாக வரும் அந்த ரிசார்ட் வீடும் நம்பும் படி இல்லை. இது போல் ஆங்காங்கே வரும் ஒருசில காட்சிகள் நம்மை கதைக்குள் ஒன்ற விடாமல் செய்கிறது. சுழல் முதல் பாகம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், தமிழில் ஒரு நல்ல கிரைம் திரில்லர் பார்க்க பிடிக்கும் என்றால் சுழல் 2 உங்களுக்கு பிடிக்கலாம்.
மேலும் படிக்க | அச்சு அசலாக அப்பாஸை போலவே இருக்கும் அவரது மகன்! வைரல் புகைப்படம் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ