ARTICLE AD BOX
விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் வெளியூருக்கு பயணிக்கும்போது ஆங்காங்கே விற்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி உண்ண வேண்டுமென்ற ஆசை எழுவது இயற்கை.
நாம் நம் பயணத்தைத் திட்டமிடும்போதே, உட்கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றியும் யோசித்து, உடல் நலம் கெடாதவாறு, எதை எதை சாப்பிடவேண்டும் என முடிவெடுத்து அதற்கேற்றவாறு ஏற்பாடுகளை செய்து கொண்டு பயணத்தை தொடங்குவது சிறந்த நன்மை பயக்கும். அது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.ஆரோக்கியம் நிறைந்த நட்ஸ்களை உண்ணலாம்:
ஏர் போர்ட் மற்றும் ரோட் சைட் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி உண்பதற்குப் பதில் சத்து மிக்க நட்ஸ் மற்றும் சீட்ஸ்களை கூடவே எடுத்துச் சென்று அவ்வப்போது உண்ணலாம். கூடவே கொஞ்சம் ஃபிரஷ்ஷான பழங்களையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவை பசியைக் குறைத்து, பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி உண்ண வேண்டும் என்ற ஆவலையும் கட்டுப்படுத்தும்.
2.எப்பவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுதல்: நம் கூடவே ஒரு வாட்டர் பாட்டில் நிறைய
தண்ணீரை வைத்துக்கொண்டு அடிக்கடி குடிப்பது அவசியம். ஏனெனில் தாகம் எடுக்கும்போது அதை பசி என்று தவறாகப் புரிந்துகொண்டு தேவையில்லாமல் நாம் ஸ்னாக்ஸ்ஸை எடுத்துக்கொள்ள ஆரம்பிப்போம்.
3.புத்திசாலித்தனமாக உணவைத் தேர்ந்தெடுத்தல்:
லஞ்ச் மற்றும் டின்னருக்காக உணவைத் தேர்ந்தெடுக்கையில் ஆவியில் வேகவைத்த, பேக் (Bake) செய்யப்பட்ட மற்றும் க்ரில்ட் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நன்மை தரும். பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ப்ரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் அடங்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதால் நம் உடலில் சக்தியின் அளவு குறையாமல் பாதுகாக்க முடியும்.
4.உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல்:
நாம் நம் வீட்டில் இருக்கும்போது உட்கொள்ளும் உணவின் அளவை விட, பயணத்தில் இருக்கும்போது அளவைக் குறைத்து உண்ணுவதால் உடலுக்குள் கலோரி அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். இதற்கு நாம் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணலாம் அல்லது வாங்கும்போதே உணவைக் குறைத்து வாங்கலாம்.
5.ஒரு வேளை உணவையும் தவிர்க்காமல் இருத்தல்: நீண்ட தூரப் பயணத்தில் இருக்கும்போது சில நேரம் ஒரு நேர உணவை ஸ்கிப் (Skip) பண்ண வேண்டிய நிர்பந்தம் உண்டாகலாம். இதனால் அடுத்த வேளையின்போது அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு அமைந்துவிடும்.
எனவே ஒவ்வொரு நாளுக்குமான உணவின் விவரம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறித்து ஓர் அட்டவணை தயாரித்து அதை தவறாமல் பின் பற்றுவது ஆரோக்கியம் தரும் செயலாகும். குறிப்பிட்ட இடைவெளிகளில், குறைந்த அளவில் ஆரோக்கியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுதல் அதிக நன்மை தரும்.
பயணம் மேற்கொள்கையில் மேற்கூறிய ஆலோசனைகளை மனதில் இறுத்தி பயணத்தில் சுகானுபவம் பெற்று இல்லம் திரும்புங்கள்.