ARTICLE AD BOX
1992ம் ஆண்டு வெளி வந்த சின்ன கவுண்டர் படத்தில் வரும் ஒரு பாடல் இது.
ஆண் : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே… சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… ஹே…
இதைத் தொடர்ந்து நடனக் குழுவும் இதையே பாடுகிறது.
பின்னர் தீமை தரும் கண் திருஷ்டிகளின் பட்டியலும் பாட்டில் இடம் பெறுகிறது.
குழு : ஊரு கண்ணு உறவு கண்ணு… நாய் கண்ணு நரி கண்ணு… நோய் கண்ணு நொல்ல கண்ணு… நல்ல கண்ணு கொல்லி கண்ணு… கண்ட கண்ணு முண்ட கண்ணு… கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்… கண்ட பிணி தொலையட்டும்… கடுகு போல வெடிக்கட்டும்… நல்லதெல்லாம் நடக்கட்டும்… நாடும் காடும் செழிக்கட்டும்…
பாடலை எழுதி படத்தை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இசை அமைத்துப் பாடியவர் இளையராஜா.
திரு விஜயகாந்த் (1952-2023) அவர்களே வியக்கும் படி படம் சக்கை போடு போட்டது. அனைவரும் இந்தப் பாடலையும் ‘சின்னக் கவுண்டர்’ விஜயகாந்த் நடையையும் வெகுவாக ரசித்தனர்.
பகுத்தறிவுவாதிகளுக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் சங்கடத்தைத் தந்தது. கண் திருஷ்டியாவது தீமையைத் தருவதாவது என்பது அவர்களின் கொள்கை.
ஆனால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் திருஷ்டி பற்றிய நம்பிக்கை உண்டு. அதற்கு அந்தந்த நாட்டு பரிகாரங்கள் விதம் விதமானவை.
விஞ்ஞானிகள் இந்த கெட்ட திருஷ்டி (EVIL EYE) பற்றிய ‘மூட’நம்பிக்கையைப் பற்றிக் கை கொட்டிச் சிரித்தார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
அவர்களே அரண்டு மிரண்டு பயப்படும் வண்ணம் ஒரு விஞ்ஞானி இதர விஞ்ஞானிகளை பயமுறுத்தினார். அந்த சம்பவம் தான் இது!
பாலி கண்டாலே பயம் :
உல்ப்கேங் பாலி (1900-1958) ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க கருதியற்பியல் விஞ்ஞானி. 1945ல் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். அடாமிக் ஃப்யூஷன் பற்றிய அவரது பார்முலா உலகப் புகழ் பெற்றது!
அவரைக் கண்டாலேயே விஞ்ஞானிகளுக்குப் பயம்!
அவர் சோதனைச்சாலையில் இருந்தாலோ எதையாவது பார்த்தாலோ நிச்சயமாக ஏதாவது கோளாறு ஆகி விடும் என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது! பாதி சோதனையின் போது மின்சக்தி போய்விடும். வாக்குவம் டியூபுகள் லீக் ஆகும், சாதனங்கள் உடையும் அல்லது பழுதுபடும்... இப்படி நிச்சயம் ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும். சோதனை உருப்படாது. ஆகவே அவர் சோதனையின் நடுவில் வந்தாலே விஞ்ஞானிகள் நடுநடுங்குவர்.
ஒரு நாள் புரபஸர் ப்ராங்க், கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது லாபரட்டரியில் ஒரு முக்கிய சோதனையை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சாதனம் உடைந்து விட்டது. அந்தச் சமயத்தில் பாலி டென்மார்க்கிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் இருக்க சான்ஸே இல்லை!
ஆனால் பின்னால் தான் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாதனம் உடைந்த அதே வினாடியில்தான் ஜூரிச்சிலிருந்து கோபன்ஹேகனுக்கு பாலியை ஏற்றிக் கொண்டு சென்ற புகைவண்டி கோட்டிங்டன் இரயில் நிலையத்தில் வந்து நின்றதாம்! அடேயப்பா, ரயில் நிலையத்தில் அவர் வந்த போதே இந்த ‘எபக்ட்’ என்றால் ஒருவேளை சோதனை செய்யும் லாபரட்டரிக்கு அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்களுக்குள் ‘பாலி விளைவைப்’ பற்றிப் பேசி மகிழ்ந்தனராம்!
நீல்ஸ்போரின் குதிரைலாடம்:
அதிர்ஷ்டம், கண் திருஷ்டி ஆகியவற்றை எல்லாம் நம்பாத இன்னொரு இயற்பியல் விஞ்ஞானி நீல்ஸ் போர் (1885-1962).
1922ல் நோபல் பரிசைப் பெற்றவர்.
அவரைப் பார்ப்பதற்கு அவரது சக விஞ்ஞானி ஒருவர் கோபென்ஹேகனுக்கு வந்தார். அவரைச் சந்திக்கும் போது அவரது மேஜைக்கு அருகில் இருந்த சுவரில் குதிரை லாடம் ஒன்று பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியமுற்றார்.
ஏனெனில் அதிர்ஷ்டத்தை நம்பும் எல்லோரும், குதிரை லாடத்தை (Horseshoe) வீட்டில் பதித்து வைத்துக் கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் வரும் என்று அதை வீட்டுச் சுவரில் பதித்து வைப்பது வழக்கம். ஆனால் விஞ்ஞானியான நீல்ஸ் போர் இதை மூட நம்பிக்கை என்று சொல்பவர் ஆயிற்றே!
வியப்புற்ற அமெரிக்க நண்பர், “என்ன, குதிரை லாடம் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நிச்சயம் நீங்கள் நம்பாதவர் தானே!! அப்படி என்றால்..? என்று இழுத்தார்.
நீல்ஸ் போர், “நண்பரே! அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நான் நம்பவே இல்லை. அது சுத்த அபத்தம்! என்றாலும் கூட அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்கிறார்களே! அந்த லாஜிக்கிற்காகத் தான் அதை மாட்டி வைத்துள்ளேன்...” என்றார்.
இந்த லாஜிக்கைக் கேட்டு நண்பர் அசந்து போனார்!
இப்படி ஏராளமான பகுத்தறிவு விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் சுவையான முரண்பட்ட நம்பிக்கைகளும் செயல்களும் உண்டு!